ADDED : பிப் 27, 2025 11:24 PM

சென்னை:சென்னை ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள சாம்சங் இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் 17 பேரை, அந்நிறுவனம் சமீபத்தில் பணியிடை நீக்கம் செய்தது. இடைநீக்கம் தொடர்பாக சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் மற்றும் ஆலை நிர்வாகம் இடையே நடந்த பேச்சு தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில், சாம்சங் நிறுவன தொழிலாளர்களுக்கு ஆதரவாக, இப்பகுதியைச் சுற்றியுள்ள 40 ஆலைகளில் உள்ள ஊழியர் சங்கங்கள், மார்ச் 13ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன.
சாம்சங் தொழிற்சாலையைச் சுற்றியுள்ள பகுதியில் இருக்கும் 58 ஆலைகளில், சி.ஐ.டி.யு., ஆதரவு பெற்ற தொழிற்சங்கங்கள் உள்ளன. இவற்றில், 40 தொழிற்சங்கங்கள் மட்டுமே வேலை நிறுத்தத்திற்கான அறிவிப்பை ஏற்றுக்கொண்டு உள்ளன.
இந்நிலையில், சாம்சங் நிறுவனம் விடுத்து உள்ள அறிக்கையில், 'தொழில் துறை ஸ்திரத்தன்மையையும், பணியிடத்தில் அமைதியை சீர்குலைக்கும் தொழிலாளர்களின் எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கையையும், நிர்வாகம் சகித்துக்கொள்ளாது.
நிறுவனத்தின் கொள்கைகளை அனைத்து ஊழியர்களும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். இக்கொள்கைகளை மீறுபவர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்துள்ளது.

