ADDED : ஜூன் 27, 2024 01:18 AM

புதுடில்லி:'5ஜி' அலைக்கற்றைக்கான ஏலம், 11,340 கோடி ரூபாய் மதிப்புடன், இரண்டே நாட்களில் முடிவடைந்தது.
மொபைல் போன்களுக்கான 5ஜி ஏலம், கடந்த செவ்வாயன்று துவங்கியது. இந்த ஏலத்தின் வாயிலாக, அரசுக்கு 96,238 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அரசின் இந்த மதிப்பீட்டுத் தொகையைக் காட்டிலும், 12 சதவீதத்திற்கும் குறைவாகவே கிடைத்துள்ளது. 800 மெகா ஹெர்ட்ஸ் முதல் 26 ஜிகா ஹெர்ட்ஸ் வரையிலான மொத்தம் 10 ஜிகா ஹெர்ட்சுக்கான அலைக்கற்றை ஏலத்தில், 11,340 கோடி ரூபாய் வரை ஏலம் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏலத்தின் முதல் நாளான செவ்வாயன்று, ஐந்து சுற்று ஏலம் நடந்தது. ஆனால், இரண்டாம் நாளான நேற்று, முந்தைய நாளை விட ஆர்வம் குறைவாக இருந்த காரணத்தினால், காலை 11:30 மணிக்கே ஏலம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
முதல் நாளில் எடுக்கப்பட்ட ஏலத்தை விட, இரண்டாம் நாளில் எடுக்கப்பட்ட ஏலத்தின் மதிப்பு கூடவும் இல்லை; குறையவும் இல்லை. மொத்தம் நடந்த ஏழு சுற்றுகளில் 140 முதல் 150 மெகா ஹெர்ட்ஸ் மட்டுமே விற்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
'ஏர்டெல்' நிறுவனம் 6,857 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டில் ஏழு நாட்கள் நடந்த ஏலத்தின் போது, 1.50 லட்சம் கோடி மதிப்பிலான 5ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையானது.
இதில், முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம், அனைத்து ஏலங்களிலும் கிட்டத்தட்ட பாதியை எடுத்தது. அதன் மதிப்பு 88,078 கோடி ரூபாயாகும்.
இதைத் தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் 43,084 கோடி ரூபாய்க்கும், வோடபோன் ஐடியா 18,799 கோடி ரூபாய்க்கும் ஏலம் எடுத்தன.