ADDED : ஏப் 17, 2024 01:03 AM

புதுடில்லி: நடப்பு ஏப்ரல் மாதத்தின் முதல் 15 நாட்களில், நாட்டின் பெட்ரோல் விற்பனை 7 சதவீதம் அதிகரித்தும்; டீசல் விற்பனை 9.50 சதவீதம் சரிந்தும் உள்ளதாக, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் தரவுகள் தெரிவிக்கின்றன.
நாட்டின் 90 சதவீத எரிபொருள் சந்தையை உள்ளடக்கிய மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் பெட்ரோல் விற்பனை இந்த காலகட்டத்தில் 12.20 லட்சம் டன்களாக இருந்தது.
இது கடந்தாண்டின் இதே காலகட்டத்தில் 11.40 லட்சம் டன்களாக இருந்தது. இந்நிறுவனங்களின் டீசல் விற்பனை 9.50 சதவீதம் சரிந்து 31.40 லட்சம் டன்களாக உள்ளது.
கடந்த மாதம் 2 ரூபாய் விலை குறைப்பை தொடர்ந்து, தனிநபர் இரு சக்கர வாகனங்களின் பயன்பாடு அதிகரித்ததால், பெட்ரோல் விற்பனை அதிகரித்துள்ளது.
பயிர் அறுவடை காலம் மற்றும் கோடை காலம் துவங்கியுள்ளதால், கார்களில் கூடுதலான ஏ.சி., பயன்பாடு ஆகியவை, சரிந்துள்ள டீசல் விற்பனையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதே காலகட்டத்தில் விமான எரிபொருள் விற்பனை 10.40 சதவீதம் அதிகரித்து 3.36 லட்சம் டன்னாகவும்; சமையல் எரிவாயு சிலிண்டரின் விற்பனை 8.80 சதவீதம் அதிகரித்து 12 லட்சம் டன்னாகவும் இருந்தது.

