ADDED : ஜூன் 14, 2024 02:00 AM

புதுடில்லி: இந்தியா 8.70 டன் உயர் தர அன்னாசி பழங்களை, ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு ஏற்றுமதி செய்துள்ளதாக வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மஹாராஷ்டிராவின் கொங்கன் பகுதியில் உள்ள சிந்துதுர்க் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் எம்.டி.2., வகை அன்னாசி பழங்கள் இனிப்பு மற்றும் தரத்திற்கு பெயர் பெற்றவை. இவ்வகை பழங்கள், 'கோல்டன் ரைப்' மற்றும் 'சூப்பர் ஸ்வீட்' என்றும் அழைக்கப்படுகின்றன.
இவ்வகை பழங்கள், வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் வாயிலாக, கொள்முதல் செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
கடந்த 1980ம் ஆண்டில் இவ்வகை பழங்கள் அறிமுகமாகின. கோஸ்டாரிகா, பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து நாடுகளில் இவ் வகை அன்னாசி பழங்கள் பயிரிடப்படுகின்றன. அன்னாசி பழ உலகில், இந்த வகை பழங்கள் தங்கத்துக்கு இணையாக மதிக்கப்படுகின்றன.