நாள் ஒன்றுக்கு ரூ.8 லட்சம் அபராதம் 'பைஜூஸ்' ரவீந்திரனுக்கு உத்தரவு
நாள் ஒன்றுக்கு ரூ.8 லட்சம் அபராதம் 'பைஜூஸ்' ரவீந்திரனுக்கு உத்தரவு
ADDED : ஆக 02, 2024 12:14 AM

புதுடில்லி:'பைஜூஸ்' நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் ரிஜூ ரவீந்திரன் மோசடி செய்ததாக கூறப்படும் 4,400 கோடி ரூபாய்க்கு தீர்வு காணும்வரை, நாள் ஒன்றுக்கு 8.30 லட்சம் ரூபாயை அவர் அபராதமாக செலுத்த வேண்டும் என, அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பைஜூஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனமான 'திங்க் அண்டு லேர்ன்' நிறுவனத்தின் மூன்று இயக்குனர்களில் ரிஜூ ரவீந்திரனும் ஒருவர். இவர் பைஜூ ரவீந்திரனின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் தங்களது கல்வி பயிற்சி வணிகத்தை விரிவுபடுத்தும் நோக்கில், பைஜூஸ் நிறுவனம், அந்நாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து, கடந்த 2022ம் ஆண்டு, கிட்டத்தட்ட 10,000 கோடி ரூபாய் நிதியை திரட்டியது.
இந்த நிதியை திரட்டிய சில நாட்களிலேயே, இந்தியாவிலுள்ள பைஜூசின் அலுவலகங்கள் சோதனையிடப்பட்டன.
கடன் வழங்கிய அமெரிக்க நிறுவனங்கள் பல, கடனை காலக்கெடுவுக்குள் திருப்பிச் செலுத்தவில்லை என குற்றச்சாட்டை எழுப்பின.
அதுமட்டுமல்லாமல், அமெரிக்காவில் போலி நிறுவனம் ஒன்றை அமைத்து, அதன் வாயிலாக, கிட்டத்தட்ட 4,400 கோடி ரூபாயை மோசடி செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த குற்றச்சாட்டை பைஜூஸ் மறுத்துள்ளது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்து வரும் திவால் நடவடிக்கை களுக்கான அமெரிக்க நீதிமன்றம், மோசடி செய்ததாக கூறப்படும் தொகை குறித்து தீர்வு காணும் வரை, நாள் ஒன்றுக்கு 8.30 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என, ரிஜூ ரவீந்திரனுக்கு உத்தரவிட்டுள்ளது.