ஷாப்பிங் மோகத்தை கட்டுப்படுத்த உதவும் ஏழு நாள் விதி!
ஷாப்பிங் மோகத்தை கட்டுப்படுத்த உதவும் ஏழு நாள் விதி!
ADDED : ஜூலை 15, 2024 02:19 AM

விலை அதிகம் என்றாலும், தேவையில்லாத பொருட்களை வாங்கும் பழக்கம்
நம்மில் பலருக்கு இருக்கிறது. விளம்பரத்தை பார்த்து வாங்கும் புதிய ஆடை அல்லது நண்பர்கள் வாங்கியிருக்கின்றனர் என்பதற்காக வாங்கும் புதிய ஸ்மார்ட்போன் என அத்தியாவசிய தேவை இல்லை என்றாலும், புதிய பொருட்களை வாங்கி விடுகிறோம்.
வாங்கும் போது திருப்தி அளித்தாலும், பின்னர் யோசித்து பார்க்கும் போது, இந்த செலவை தவிர்த்திருக்கலாம் எனத் தோன்றும். இப்படி விரும்பியவுடன் யோசிக்காமல் பொருட்களை வாங்கும் பழக்கத்தை கட்டுப்படுத்த உதவும் வழியை பார்க்கலாம்.
ஏழு நாள் விதி:
விருப்பம் காரணமாக தேவையில்லாத பொருட்களை வாங்கும் பழக்கத்தை கட்டுப்படுத்த
எளிதான வழியாக ஏழு நாள் விதி முன்வைக்கப்படுகிறது. பொருளை வாங்க நினைத்ததும், உடனே வாங்காமல் ஏழு நாட்கள் தள்ளிப்போட வேண்டும் என்பது தான் இந்த விதி.
காத்திருப்பின் பலன்:
பொருட்களை வாங்குவதை தள்ளிப்போடும் போது, இடைப்பட்ட காலத்தில் அந்த பொருள் உண்மையிலேயே தேவை தானா என தீர்மானிக்கலாம். அதே நேரத்தில் வாங்குவதற்கான விருப்பத்தை கட்டுப்படுத்துவதை விட தள்ளிப்போடுவது எளிதானது. மனம் தானாகசமாதானமாகி விடும்.
பட்ஜெட் நிர்வாகம்:
அடுத்த வாரம் வருவதற்கு முன், அந்த பொருளுக்கான செலவை மாத பட்ஜெட்டுக்குள் சமாளிக்க முடியுமா என யோசிக்கலாம். பல நேரங்களில், வாங்கும் உள்ளுணர்வை தள்ளி போட்ட பிறகு, அதன் மீதான விருப்பம் குறைவதை பார்க்கலாம். இல்லை எனில், அந்த பொருள் உண்மையாகவே தேவையாக இருக்கலாம்.
விருப்ப பட்டியல்:
உடனடி தேவை இல்லாத எல்லா பொருட்களுக்கும் இந்த விதி பொருந்தும். ஆடைகள், கேட்ஜெட்கள், பொழுதுபோக்கு தேவைகள் போன்றவை இதில் அடங்கும். இடைப்பட்ட காலத்தில் வாங்க விரும்பும் பொருளை விருப்ப பட்டியலில் எழுதி வைத்து காத்திருக்கலாம். ஏழு நாள் முடிந்ததும் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும்.
நிதி இலக்குகள்:
பொருட்களை வாங்குவதை விட, நிதி இலக்குகள் முக்கியம் என்பதை நினைவில் கொள்வது நல்லது. நிதி இலக்குகளுக்கு இடையூறாக இருப்பதை தவிர்க்க வேண்டும். இதை எளிதாக பின்பற்ற, ஏழு நாள் விதி உதவும். வீட்டில் உள்ளவர்களையும் இந்த விதியை பின்பற்ற ஊக்குவிக்க வேண்டும்.