இந்தியாவில் ராக்கெட் தயாரிப்பு 'அதானி - தாலஸ்' கூட்டணி
இந்தியாவில் ராக்கெட் தயாரிப்பு 'அதானி - தாலஸ்' கூட்டணி
ADDED : ஜூன் 27, 2024 01:01 AM

புதுடில்லி:இந்தியாவில் ராக்கெட் தயாரிக்கும் நோக்கில், அதானி குழுமம், 'தாலஸ்' குழுமத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
அதானி குழுமத்தை சேர்ந்த 'அதானி டிபன்ஸ் அண்டு ஏரோஸ்பேஸ்' நிறுவனம், பாதுகாப்பு துறை பொருட்களின் வடிவமைப்பு, தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் இந்தியாவில் ராக்கெட் தயாரிப்பதற்காக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தாலஸ் குழுமத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
தாலஸ் குழுமம், வான்வெளி, பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு துறைகளுக்கான, மின்சார சாதனங்கள் மற்றும் உபகரணங்களை வடிவமைத்து, தயாரித்து வருகிறது.
இந்த ஒப்பந்தம், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மையம் அமைப்பதற்கும், பாதுகாப்பு மற்றும் வான்வெளி துறைகளுக்கான தயாரிப்பு மற்றும் பராமரிப்பு மையங்களை அமைப்பதற்கும், உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாத துவக்கத்தில், உலகின் முன்னணி தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு குழுமங்களில் ஒன்றான, 'எட்ஜ்' குழுமத்துடன், அதானி டிபன்ஸ் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டதும் நினைவுகூரத்தக்கது.