ADDED : மே 25, 2024 01:48 AM

மும்பை,:கடந்தாண்டு ஜனவரி மாதம், அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான, ஹிண்டன்பர்க், பங்கு விலைகளை முறைகேடாக உயர்த்தி அதானி குழுமம் மோசடி செய்துள்ளதாக, அதன் ஆய்வறிக்கையில் தெரிவித்திருந்தது.
இதையடுத்து, அதானி குழுமத்தின் கீழ் இயங்கும் அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் கடும் சரிவைக் கண்டன.
குறிப்பாக, அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம், அதன் சந்தை மதிப்பில் 2.50 லட்சம் கோடி ரூபாயை இழந்தது. அதானி குழுமத்தின் சந்தை மதிப்பும், கிட்டத்தட்ட 12.45 லட்சம் கோடி ரூபாய் சரிந்தது.
இந்நிலையில், அதானி குழும நிறுவனங்கள் இழந்த சந்தை மதிப்பை மீட்டெடுத்து உள்ளன. சந்தை மதிப்பில் கிட்டத்தட்ட 2.50 லட்சம் கோடி ரூபாயை இழந்த, 'அதானி என்டர்பிரைசஸ்' நிறுவனம், நேற்றைய சந்தை நிலவரப்படி இழந்த மதிப்பு அனைத்தையும் திரும்பப் பெற்றுவிட்டது.
ஹிண்டன்பர்க் அறிக்கையில் அதானி குழுமத்தின் நிதி நிலை சீரற்ற நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டுகளை பொய்யாக்கும் வகையில், அதானி குழுமம் பல்வேறு கடன்களை முன்கூட்டியே செலுத்தியது.
மேலும், இந்தியாவிலும் அண்டை நாடுகளிலும் பல புதிய திட்டங்களை கைப்பற்றியது. இதற்கிடையே, ஹிண்டன்பர்க் அறிக்கையின் நம்பகத்தன்மை குறித்தும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது.
இவை அனைத்தும், முதலீட்டாளர்களுக்கு அதானி குழும நிறுவனங்களின் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
அதானி குழுமத்தின் 10 நிறுவனங்கள், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றில், அதானி என்டர்பிரைசஸ் உட்பட, ஆறு நிறுவனங்களின் பங்குகள், ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு முன்பிருந்த நிலையை தாண்டி, தற்போது வர்த்தகமாகி வருகின்றன.

