இணை காப்பீடு திட்டங்கள் அளிக்கும் சாதகங்கள், பாதகங்கள்
இணை காப்பீடு திட்டங்கள் அளிக்கும் சாதகங்கள், பாதகங்கள்
ADDED : செப் 02, 2024 12:54 AM

ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீடு இரண்டும் இணைந்த ஒற்றை பாலிசியை பெறுவது ஏற்றதா என்பது பற்றிய ஒரு அலசல்.
காப்பீடு திட்டங்களின் பிரிமியம் உயர்ந்து வரும் நிலையில், ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு இரண்டும் கலந்த பாலிசிகள், நுகர்வோர் மத்தியில் பிரபலமாகி வருகின்றன. தனிநபர்களின் நிதி பாதுகாப்பை உறுதி செய்ய போதுமான ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீடு அவசியம்.
எனினும், தனித்தனியே பாலிசி களை எடுப்பதைவிட, இரண்டு பாதுகாப்பையும் அளிக்கும் ஒற்றை பாலிசிகளை காப்பீடு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. காப்பீடு நிறுவனங்கள் தரப்பில் இந்த இணை பாலிசிகள் செலவை குறைப்பதாக கருதப்படுகின்றன. நுகர்வோருக்கும் இந்த பாலிசி ஏற்றதாக அமைந்தாலும், இவற்றின் சாதகங்கள் மற்றும் பாதகங்களை அறிந்திருக்க வேண்டும்.
எளிய சேவை
காப்பீட்டில் பல வகையான திட்டங்கள் இருக்கின்றன. இவற்றில் இருந்து பொருத்தமான பாலிசியை தேர்வு செய்வது சிக்கலானதாக அமையலாம். இந்த பாலிசிகளை பராமரிப்பதும் சிக்கலாகலாம். எனினும், ஆயுள் பாதுகாப்பு, மருத்துவ பாதுகாப்பு இரண்டுக்கும் ஒரே இணை பாலிசியை பெறுவது எளிதானதாக அமையலாம்.
இதற்காக செயல்முறை எளிதாக அமைவதோடு, பிரிமிய தொகை செலுத்துவதும் எளிதாக அமைகிறது. ஒற்றை பாலிசியில் போதுமான பாதுகாப்பு பெற்றதாக உணரலாம். காப்பீடு நிறுவனங்களும் இதற்கேற்ற பாலிசிகளை வழங்கி வருகின்றன.
மேலும், இணை பாலிசிகளுக்கான பிரிமியம் கட்டணமும் குறைவாக இருக்கலாம். ஒரு சில காப்பீடு நிறுவனங்கள் இணை பாலிசிகளுக்கு தள்ளுபடி சலுகை வழங்குவதால், தனித்தனியே பாலிசிகள் பெறுவதை விட, இந்த முறையில் கட்டணம் குறைவாக இருக்கலாம். அதே நேரத்தில் ஒற்றை பாலிசியை பராமரிப்பதும் எளிதானது.
மேலும் கிளைம் செயல்முறையிலும் தனித்தனி பாலிசிகளை விட, ஒற்றை பாலிசி சாதகமானதாக தோன்றலாம்.
பாதகங்கள்
எனினும், இணை பாலிசிகளின் பாதகமான அம்சங்களையும் அறிந்திருக்க வேண்டும். பாலிசிகள் அவரவர் தேவைக்கு ஏற்ப பொருத்தமானதாக இருக்க வேண்டும். குழு காப்பீடு பாலிசி தொடர்பான விவாதத்தில், நிறுவனங்கள் அளிக்கும் குழு காப்பீடு மட்டுமே போதுமானது அல்ல. தனியே சொந்த காப்பீடும் இருப்பது நல்லது என சொல்லப்படுவதை இங்கு மனதில் கொள்ள வேண்டும்.
மருத்துவ காப்பீட்டை பொருத்தவரை விரிவான காப்பீடு அவசியம் என சொல்லப்படுகிறது. ஆனால், இணை பாலிசிகளை நாடும் போது தேவைக்கேற்ற பாலிசி அம்சங்களை தேர்வு செய்வது சாத்தியம் இல்லாமல் போகலாம்.
இணை காப்பீடு திட்டங்கள் சிக்கலானவை என்பதால், காப்பீடு திட்டங்களை ஒப்பிட்டு பார்ப்பதும் கடினமாக அமையலாம். மேலும், தேவை எனில் காப்பீடு நிறுவனத்தை மாற்றிக்கொள்ளும் வசதியை பயன்படுத்துவதும் சிக்கலாகலாம்.
எனவே, இணை காப்பீடு திட்டங்களை நாடுவதற்கு முன், ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு தேவை தொடர்பான அம்சங்களை கவனமாக பரிசீலித்து, அதற்கு பொருத்தமான பாலிசியை நாடலாம். தனித்தனி பாலிசிகளுடன் இணை பாலிசி அம்சங்களை ஒப்பிட்டு பார்த்து, போதிய பாதுகாப்பு இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நீண்ட கால தேவைகளுக்கு ஈடு கொடுக்குமா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தேவை எனில் தொழில் முறை ஆலோசனையை நாடுவது நல்லது.