உள்நாட்டில் பழுப்பு சர்க்கரை விற்க அனுமதி? 60 ஆண்டு கால தடையை நீக்க பரிசீலனை சர்க்கரை விதிகளில் மாற்றம் செய்து வரைவு அறிக்கை
உள்நாட்டில் பழுப்பு சர்க்கரை விற்க அனுமதி? 60 ஆண்டு கால தடையை நீக்க பரிசீலனை சர்க்கரை விதிகளில் மாற்றம் செய்து வரைவு அறிக்கை
ADDED : ஆக 30, 2024 01:45 AM

புதுடில்லி:கடந்த 60 ஆண்டு கால தடையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், பழுப்பு சர்க்கரையை உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்வதற்கு அனுமதிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வினியோக அமைச்சகம், 'சர்க்கரை கட்டுப்பாட்டு உத்தரவு 2024' என்ற பெயரில் வரைவு அறிக்கை வெளியிட்டுஉள்ளது.
கடந்த 60 ஆண்டுகளாக ஏற்றுமதி செய்ய மட்டுமே பிரத்யேகமாக அனுமதிக்கப்பட்டு வரும் பழுப்பு சர்க்கரை குறித்த விதிமுறைகளை மாற்றும் வகையில், உள்நாட்டில் பழுப்பு கரும்பு சர்க்கரையை விற்பனை செய்ய அனுமதிக்க அதில் திட்டமிடப்பட்டுள்ளது.
க
கடந்த 1966ம் ஆண்டின் சர்க்கரை கட்டுப்பாட்டு உத்தரவில் திருத்தம் செய்யும் வகையில், இந்த வரைவு அறிக்கை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
சர்க்கரை உற்பத்தி நடைமுறைகளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப, வரைவு அறிக்கை பரிந்துரை செய்கிறது.
வழக்கமாக வெளிநாட்டு சுத்திகரிப்பு ஆலைகள் வழங்கும் ஆர்டர்களின்பேரில் மட்டுமே, இந்திய சர்க்கரை ஆலைகளில், பழுப்பு கரும்பு சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டு, ஏற்றுமதி செய்யப்படுகிறது. வெளிநாட்டு ஆலைகளில் அது சுத்திகரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சர்க்கரையை விட, பழுப்பு சர்க்கரை விலை அதிகம் என்பதால், உள்நாட்டு சந்தையில் அதை விற்பனைக்கு அனுமதிப்பதன் வாயிலாக, கரும்பு உற்பத்தித் துறைக்கு பயன் கிடைக்கும் என, அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
வரைவு அறிக்கையில், வெல்லம், நாட்டுச்சர்க்கரை உள்ளிட்ட பாரம்பரிய இனிப்பூட்டிகள் தொடர்பான விதிகளில் மாற்றம் செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது.
சர்க்கரை விலையை முறைப்படுத்தும் அதிகாரத்தை அரசுக்கு வழங்க, வரைவு அறிக்கை வகை செய்கிறது.
சர்க்கரை உற்பத்தியாளர்கள், வினியோகஸ்தர்களின் விற்பனை, இருப்பு, சந்தையில் விடுவித்தல் தொடர்பான கட்டுப்பாடுகளை விதிக்க, அரசுக்கு இதில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
க
இந்த மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டால், உள்நாட்டில் பழுப்பு கரும்பு சர்க்கரை விற்பனை வாயிலாக, சர்க்கரை ஆலைகள் பயனடைவது உட்பட குறிப்பிடத்தக்க மேம்பாட்டை, இந்திய சர்க்கரை உற்பத்தித் துறை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், தினசரி 500 டன்களுக்கு கீழ் கரும்பு பிழிதிறன் கொண்ட சிறிய ஆலைகளுக்கு விதிகள் பொருந்தாது என்பதால், புதிய மாற்றங்களால் அவை பாதிக்கப்படாது என்று கூறியுள்ள நுகர்வோர் விவகாரத் துறை, வரைவு அறிக்கை மீது, அடுத்த மாதம் 23ம் தேதிக்குள், தொடர்புடையவர்கள் கருத்து தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்துஉள்ளது.