உலகின் வலிமையான பிராண்டு பட்டியலில் அமுல் முதலிடம்
உலகின் வலிமையான பிராண்டு பட்டியலில் அமுல் முதலிடம்
ADDED : ஆக 22, 2024 01:42 AM

புதுடில்லி: உலகின் மிகவும் வலிமையான உணவு மற்றும் பால் பொருட்களுக்கான பிராண்டுகள் பட்டியலில், இந்தியாவின் அமுல் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளதாக பிராண்ட் பைனான்ஸ் தெரிவித்துள்ளது. மற்றொரு இந்திய நிறுவனமான 'பிரிட்டானியா' இந்த பட்டியலில் நான்காவது இடம் பிடித்துள்ளது.
லண்டனை தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச பிராண்டு மதிப்பீட்டு ஆலோசனை நிறுவனமான 'பிராண்ட் பைனான்ஸ்', 'உணவு மற்றும் பானம் 2024' என்ற பெயரில் சர்வதேச பிராண்டுகளின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுஉள்ளதாவது: சர்வதேச சந்தையில், அமுல் நிறுவனத்தின்தாக்கம் தொடர்ந்து, அதிகரித்து வருகிறது. பிராண்டு வலிமை குறியீட்டில், 100க்கு 91 புள்ளிகளுடன் AAA+ குறியீட்டை பெற்று முதல் இடத்தில் உள்ளது. பிரிட்டானியா நான்காம் இடத்தில் உள்ளது.
அமுலின் பிராண்டு மதிப்பு, 2023ம் ஆண்டில் இருந்ததைவிட 11 சதவீதம் அதிகரித்து, 27,400 கோடி ரூபாயாக உள்ளது. வலிமையான பிராண்டுகளின் பட்டியலில் அமுல் ஆதிக்கம் செலுத்தினாலும், உலகின் அதிக மதிப்புமிக்க உணவு பிராண்டு பட்டியலில் நெஸ்லே தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.
இந்நிறுவனத்தின் மதிப்பு 7 சதவீதம் சரிந்து, கிட்டத்தட்ட 1.73 லட்சம் கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.