நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பால் ஆண்டுக்கு ரூ.19,410 கோடி இழப்பு
நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பால் ஆண்டுக்கு ரூ.19,410 கோடி இழப்பு
ADDED : மார் 14, 2025 11:46 PM

புதுடில்லி:முறையாக சுத்திகரிக்கப்படாத கழிவுநீர், நீர்நிலைகளில் கலந்து மாசுபடுத்துவதால், இந்திய மீன்வளத்துறை ஆண்டுக்கு 19,140 கோடி ரூபாய் இழப்பை சந்தித்து வருவதாக ஆய்வறிக்கை ஒன்றில் கூறப்பட்டு உள்ளது.
ஜப்பானில் நடைபெற்ற உலக பெருங்கடல் மாநாட்டின் துவக்க விழாவில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
கழிவுநீர் மேலாண்மையில் உரிய கவனம் செலுத்தாததால், பிரேசில், இந்தியா, கென்யா, பிலிப்பைன்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் அதிக விலை கொடுத்து வருகின்றன.
சுத்திகரிக்கப்படாத அல்லது அரைகுறையாக சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் மாசடைவதற்கும், நோய்க்கும் மூலக்காரணமாக உள்ளன.
இந்த மாசடைந்த நீர் ஆறுகள், பெருங்கடல் மற்றும் குடிநீர் வினியோகத்தில் கலப்பதால், மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
ஐந்து நாடுகளில் இந்தியாவின் மீன்வளத்துறை அதிகபட்சமாக, ஆண்டுக்கு 19,140 கோடி ரூபாய் அளவுக்கு, 5.4 சதவீதம் பொருளாதார இழப்பை சந்திக்கிறது. இதற்கு அடுத்ததாக, கென்யா 5.1 சதவீதம் இழப்பை சந்தித்து வருகிறது.
இது, கடல் உணவுப்பொருட்கள் ஏற்றுமதியில் முன்னணியில் உள்ள இந்தியாவுக்கு உள்நாட்டு உணவு பாதுகாப்புடன், ஏற்றுமதி சந்தைக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது.
இது தவிர, ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நாடுகளில், இந்தியாவில் மாசு கலந்த குடிநீரை குடிப்பதால் ஏற்படும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல்நலக்குறைவு காரணமாக, ஆண்டுக்கு 2,140 கோடி ரூபாய் (246 மில்லியன் டாலர்) சுகாதாரச் செலவு ஏற்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.