தங்கம் மீது நம்பிக்கையை அதிகரிக்க நிறுவனங்களுக்கு தணிக்கை முத்திரை
தங்கம் மீது நம்பிக்கையை அதிகரிக்க நிறுவனங்களுக்கு தணிக்கை முத்திரை
ADDED : ஆக 07, 2024 01:51 AM

மும்பை:தங்க நகை தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் கூட்டமைப்புகள் இணைந்து, ஐ.ஏ.ஜி.இ.எஸ்., எனும் 'இந்தியன் அசோசியேஷன் பார் கோல்டு எக்செலன்ஸ் அண்டு ஸ்டாண்டர்ட்ஸ்' என்ற புதிய சங்கத்தை துவங்கியுள்ளன.
சுய ஒழுங்குமுறை அமைப்பாக இயங்க உள்ள இச்சங்கம், உலக தங்க கவுன்சிலின் உதவியுடன் துவங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்தியாவில் உள்ள நகை வியாபாரிகளின் கூட்டமைப்புகளான, 'இந்திய புல்லியன் மற்றும் ஜூவல்லர்ஸ் அசோசியேஷன், ஆல் இந்தியா ஜெம்ஸ் மற்றும் ஜூவல்லரி கவுன்சில் ஆப் இந்தியா, ஜெம்ஸ் அண்டு ஜூவல்லரி எக்ஸ்போர்ட் கவுன்சில்' ஆகியவை இணைந்து, இந்த சங்கத்தை துவங்கியுள்ளன.
தங்க விற்பனையில் ஈடுபடும் நிறுவனங்களின் மீதான நம்பிக்கை குறைபாட்டை போக்கவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதுமே, இதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உலக தங்க கவுன்சிலின் இந்தியாவுக்கான தலைமை செயல் அதிகாரி சச்சின் ஜெயின் தெரிவித்ததாவது:
தங்க விற்பனையில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு, மிகவும் கடுமையான தணிக்கையின் அடிப்படையில் அங்கீகாரம் வழங்குவதே இந்த சங்கத்தின் நோக்கம். தணிக்கைக்குப் பிறகு, உறுப்பினர்களுக்கு ஐ.ஏ.ஜி.இ.எஸ்., அமைப்பின் முத்திரை வழங்கப்படும்.
சில நிறுவனங்களின் தவறான நடவடிக்கைகளால், ஒட்டுமொத்த துறையின் மீதே மக்களுக்கு நம்பிக்கை குறைந்துள்ளதை அடுத்து, அதனை மீட்டெடுக்கும் நோக்கில், இந்த சங்கம் துவங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு டிசம்பர் அல்லது அடுத்தாண்டு ஜனவரி மாதத்துக்குள் இந்த சங்கம் செயல்பாட்டுக்கு வரும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.