வங்கதேச முதலீட்டாளர்கள் சென்னை துறைமுகத்தில் ஆய்வு
வங்கதேச முதலீட்டாளர்கள் சென்னை துறைமுகத்தில் ஆய்வு
ADDED : ஜூலை 07, 2024 01:55 AM

சென்னை: வங்கதேசத்தில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு வந்த முதலீட்டாளர்கள், இங்குள்ள வாய்ப்புகள் மற்றும் வசதிகளை நேற்று பார்வையிட்டனர்.
நாட்டில் உள்ள பெரிய 12 துறைமுகங்களில் மூன்றாவது பெரிய துறைமுகமாக சென்னை துறைமுகம் திகழ்கிறது. இந்த துறைமுகம், 24 கப்பல்கள் நிறுத்தும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது. கார்கள், கன்டெய்னர்கள், உரம், எண்ணெய் உள்ளிட்டவை அதிகளவில் கையாளப்படுகின்றன.
அதேபோல், வெளிநாடுகளில் இருந்து இயந்திரங்கள், மருந்து பொருட்கள், மின்னணு மற்றும் மின்சார சாதனங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
இதற்கிடையே, வங்க தேசத்தைச் சேர்ந்த 16 முதலீட்டாளர்கள், சென்னை துறைமுகத்துக்கு நேற்று வந்து பார்வையிட்டனர். ஏற்றுமதி, இறக்குமதிக்கான வசதிகள் குறித்து அறிந்துகொண்டனர்.
இது குறித்து, சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால் கூறியதாவது: சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்களை நவீனமாக்கி, ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை அதிகரிக்கவும், சுற்றுலா பயணியர் வருகையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, துறைமுகங்களை நவீனமாக்குவது, துறைமுகங்களின் கட்டமைப்பு மேம்பாட்டு பணி, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஊக்குவிப்பு, கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ரயில் மற்றும் சாலை போக்குவரத்து இணைப்பு உள்ளிட்ட பணிகளை படிப்படியாக மேற்கொண்டு வருகிறோம்.
இதற்கிடையே, வங்க தேசத்தைச் சேர்ந்த 16 பேர் கொண்ட குழுவினர், சென்னை துறைமுகத்தை பார்வையிட்டுள்ளனர். இங்குள்ள வசதிகள், பிற நாடுகளுடனான கப்பல் இணைப்பு வசதி ஆகியவை குறித்து விரிவாக தெரிவித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.