ADDED : ஏப் 20, 2024 10:36 PM

புதுடில்லி:சிறு, குறு நிறுவனங்களுக்கு, அவற்றின் ஜி.எஸ்.டி., இன்வாய்ஸ்களின் அடிப்படையில், சிறிய அளவிலான கடன்கள் விரைவாக வழங்கப்பட உள்ளன.
நிதி தொழில்நுட்ப நிறுவனமான 'ஓ.பி.எல்., --- எம்.எஸ்.எம்.இ.,களுக்கு எளிதாக கடன் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில், ஜி.எஸ்.டி., இன்வாய்ஸ்களின் அடிப்படையில் கடன் வழங்கும் முறையை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த வசதி பெரும்பாலான பெரிய வங்கிகளால் வழங்கப்படும் என்றும், தீபாவளிக்கு முன்னதாக இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும் என்றும் ஓ.பி.எல்., நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜினந்த் ஷா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது:
நிறுவனங்களின் ஜி.எஸ்.டி., இன்வாய்ஸ்களை பொறுத்து, அவற்றின் பணப் புழக்கத்தின் அடிப்படையில், கடன் வழங்க, 'சிட்பி' என்னும் இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். ஒவ்வொரு எம்.எஸ்.எம்.இ., நிறுவனத்தின் கடன் தகுதியை தெரிந்துகொள்ள, செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மற்றொரு வசதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
நிறுவனங்களின் நிதி, வருவாய், வங்கி ஸ்டேட்மென்ட்கள், வருமான வரி தாக்கல், ஜி.எஸ்.டி., மற்றும் பரிவர்த்தனை தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, இந்த கடன் தரவரிசை உருவாக்கப்பட உள்ளது. இது, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடன் குறித்த முடிவுகளை எடுப்பதற்கு உதவும்.
இவ்வாறு தெரிவித்தார்.

