கடன் வழங்காமல் வங்கிகள் அலைக்கழிப்பு: சமாளிக்க முடியாமல் நிறுவனங்கள் பரிதவிப்பு
கடன் வழங்காமல் வங்கிகள் அலைக்கழிப்பு: சமாளிக்க முடியாமல் நிறுவனங்கள் பரிதவிப்பு
ADDED : மே 30, 2024 01:20 AM

சென்னை: சிறு நிறுவனங்களின் நடைமுறை மூலதனச் செலவு மற்றும் விரிவாக்கத் திட்டங்களுக்கு, 5 கோடி ரூபாய்க்கு மேல் கடன் கேட்டால், 'கமிட்டி' என்ற பெயரில், வங்கிகள் அலைக்கழிப்பு செய்வதாக புகார் எழுந்துள்ளது. இதனால், தொழில்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுஉள்ளது.
தமிழகத்தில், சிறு, குறு, நடுத்தர தொழில்கள் பிரிவில், 50 லட்சத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்படுகின்றன.
இவற்றால், 1 கோடிக்கும் அதிகமானோருக்கு வேலை கிடைத்துள்ளது. பல நிறுவனங்கள், மூலதனச் செலவு, விரிவாக்கத் திட்டங்கள் போன்றவற்றுக்கு வங்கிகளில் கடன் வாங்குகின்றன. சில தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், 5 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வழங்க அலைக்கழிப்பு செய்வதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, 'டான்ஸ்டியா' எனப்படும் தமிழக சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்க முன்னாள் தலைவர் சண்முகவேலாயுதன் கூறியதாவது:
பெரும்பாலான தொழில் நிறுவனங்கள், வங்கிகளில் கடன் வாங்கி தான் தொழில் துவங்குவது, உற்பத்திச் செலவை மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.
இழுத்தடிப்பு
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில், 5 கோடி ரூபாய்க்கு மேல் கடன் கேட்கும் போது, சொத்து உத்தரவாத ஆவணங்களை வழங்குவதுடன், குறிப்பிட்ட சதவீத தொகை விளிம்பு தொகையாகவும் செலுத்தப்படுகிறது.
அதை பரிசீலித்து, வங்கி கிளை மேலாளர், மூத்த மேலாளர் போன்றோர் கடன் வழங்க நடவடிக்கை எடுப்பதில்லை; இதுகுறித்து, அவர்களிடம் கேட்டால், 'வேறு மாநிலங்களில் வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு உங்களின் கடன் விண்ணப்பம் அனுப்பப்பட்டு உள்ளது; அங்கு தனி கமிட்டி பரிசீலித்து, ஒப்பதல் வழங்கியதும், கடன் வழங்கப்படும்' என்கின்றனர்.
பின், 'கமிட்டி, ஏற்கனவே செலுத்தியதை விட விளிம்பு தொகையை கூடுதலாக செலுத்துமாறு கூறுகிறது' என்று கூறி, கடன் வழங்க இழுத்தடிக்கின்றனர். பணம் இல்லாததால் தான், கடன் கேட்கப்படுகிறது.
இந்நிலையில், விளிம்பு தொகையை அதிகம் கேட்டால் எப்படி செலுத்த முடியும். எனவே, வேறு வங்கியில் கடன் வாங்க, கடன் விண்ணப்பத்தை ரத்து செய்யுமாறும், உத்தரவாத ஆவணங்கள் மற்றும் விளிம்பு தொகையை திரும்ப தருமாறும் கேட்டால், அதை வழங்காமல் தாமதம் செய்கின்றன. இதனால், வேறு இடத்திலும் கடன் வாங்க முடியாத நிலை ஏற்படுகிறது.
நடவடிக்கை
எனவே, மூலதனச் செலவுகளை சமாளிக்க முடியாமலும், விரிவாக்கத் திட்டங்களை துவங்க முடியாமலும் தொழில் நிறுவனங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுஉள்ளது.
வங்கி மேலாளர்கள் எந்த முடிவும் எடுக்க முடியாமல், தலைமை அலுவலகம் - தொழில் நிறுவனங்கள் இடையில் தபால்காரராக இருக்கும் நிலையை மாற்ற, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.