ADDED : ஜூன் 09, 2024 02:50 AM

புதுடில்லி:கடந்த ஏப்ரலில், பாசுமதி அரிசி ஏற்றுமதி 14 சதவீதம் அதிகரித்து 4,507 கோடி ரூபாயாக உள்ளது.
நாட்டின் பாசுமதி அரிசி ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரலில், 14 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த நிதியாண்டில் கண்ட வலுவான வளர்ச்சி வேகத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
சவுதி மற்றும் ஈராக் போன்ற முக்கிய நாடுகளுக்கான ஏற்றுமதி அதிகரித்ததன் காரணமாக, இது மதிப்பின் அடிப்படையில், 4,507 கோடி ரூபாயாக இருந்தது.
இந்தியாவின் பாசுமதி ஏற்றுமதி, கடந்த நிதியாண்டான 2023 - 24ல், 15 சதவீத வளர்ச்சியை அடைந்து, சாதனை அளவாக 5.24 லட்சம் டன்னாக உயர்ந்திருந்தது.
மதிப்பு அடிப்படையில், ஏற்றுமதி 22 சதவீதம் வளர்ச்சியடைந்து, 48,389 கோடி ரூபாயை தாண்டியது. ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகள் காரணமாக, பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதி 21 சதவீதம் குறைந்துள்ளது. இதேபோன்று, கோதுமை ஏற்றுமதியும் 75 சதவீதம் குறைந்துஉள்ளது. ஒட்டுமொத்தமாக, தானிய ஏற்றுமதி 8.44 சதவீதம் குறைந்துள்ளது.