இந்தியாவில் புதிய முதலீடுகள் பிரிட்டன் அரசு அறிவிப்பு
இந்தியாவில் புதிய முதலீடுகள் பிரிட்டன் அரசு அறிவிப்பு
ADDED : பிப் 26, 2025 11:40 PM

புதுடில்லி:இந்தியாவுடன் 17 புதிய ஏற்றுமதி மற்றும் முதலீட்டு திட்டங்களை பிரிட்டன் அறிவித்து உள்ளது.
இந்தியாவில் பயணம் மேற்கொண்ட பிரிட்டன் வர்த்தக அமைச்சர் ஜோனாதன் ரெனால்ட்ஸ் மற்றும் முதலீட்டுத் துறை அமைச்சர் பாப்பி கஸ்டாப்சன் ஆகியோர் இதற்கான அறிவிப்புகளை வெளியிட்டனர். எனினும், ஏற்றுமதி மற்றும் முதலீடு தொடர்பான ஒப்பந்தங்கள் குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.
மேலும், அண்மையில் இந்திய பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அம்சங்களால், பிரிட்டன் காப்பீடு நிறுவனங்களுக்கு, இந்தியாவில் அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் காப்பீடு நிறுவனங்களை விரிவுபடுத்த கூடுதல் முதலீடு செய்யவும் பிரிட்டன் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
அண்மையில் தாக்கலான மத்திய பட்ஜெட்டில், காப்பீட்டு துறையில் வெளிநாட்டு முதலீடுக்கான அனுமதி 74 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது.
பிரிட்டனில் 950 இந்திய நிறுவனங்களும், இந்தியாவில் 650 பிரிட்டன் நிறுவனங்களும் செயல்படுவதாகவும்; இதன் வாயிலாக இருநாடுகளிலும் கிட்டத்தட்ட 6 லட்சம் வேலைவாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், பிரிட்டன் அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

