தொழில் புத்தாக்க மையம் மதுரையில் அமைக்கிறது 'சிப்காட்'
தொழில் புத்தாக்க மையம் மதுரையில் அமைக்கிறது 'சிப்காட்'
ADDED : ஆக 13, 2024 06:49 AM

சென்னை : புத்தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில், தமிழக அரசின் சிப்காட், மதுரையில் தொழில் புத்தாக்க மையத்தை அமைக்கிறது. இதற்காக மதுரை நகரில், அழகர் கோவில் சாலையில் இரு இடங்கள் தேர்வு செய்யப்பட்டதில், ஒரு இடத்தில் மையம் அமைய உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள தொழில் பூங்காக்களில், தமிழக அரசின் சிப்காட் எனப்படும் தொழில் முன்னேற்ற நிறுவனம், தொழில் புத்தாக்க மையங்களை அமைத்துள்ளது.
அவற்றில், 'ஸ்டார்ட் அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்கள், தங்களின் உற்பத்தி திறனை மேம்படுத்த தேவைப்படும் கட்டமைப்பு வசதிகள் உள்ளன.
மதுரையில், 26,500 சதுர அடியில், 24 கோடி ரூபாய் செலவில் தொழில் புத்தாக்க மையம் அமைக்கப்பட உள்ளது.
இந்த மையம், தொழில் துறையில் புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கவும், தொழில்நுட்பம் சார்ந்த புத்தாக்க நிறுவனங்களை மேம்படுத்தவும் உதவும்.
அங்கு, ஸ்டார்ட் அப் நிறுவனம் துவங்குவோர் கூட்டாக பணிபுரியும் வசதி, மேம்பட்ட கணினி மயமாக்கப்பட்ட தொழில் உற்பத்தி, கணினி மயமாக்கப்பட்ட உணவு உற்பத்தி மற்றும் பதப்படுத்துதல் உள்ளிட்ட வசதிகள் இடம் பெறும்.
மேலும் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து, சிப்காட் அதிகாரிகள் சமீபத்தில் மதுரையில் தொழில் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
தற்போது, மதுரை தொழில் புத்தாக்க மையத்திற்கு, மதுரை நகரில் அழகர் கோவில் சாலையில் தலா, 7 ஏக்கரில் இரு இடங்கள் தேர்வாகி உள்ளன. அவற்றில், ஒரு இடத்தில் மையம் அமைய உள்ளது.
இது குறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'புத்தாக்க மையத்தின் கட்டுமானப் பணிகளை சிப்காட் மேற்கொள்ளும்; அங்கு, தொழில் முனைவோருக்கு தொழில்நுட்பம் தொடர்பான ஆலோசனைகள், பயிற்சி ஒப்பந்த நிறுவனம் வாயிலாக வழங்கப்படும்.
'இந்தாண்டு இறுதிக்குள் பணிகளை துவக்கி, விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

