வரியில்லா உளுந்து இறக்குமதி ஓராண்டு நீட்டித்தது மத்திய அரசு
வரியில்லா உளுந்து இறக்குமதி ஓராண்டு நீட்டித்தது மத்திய அரசு
ADDED : மார் 12, 2025 01:42 AM

புதுடில்லி:மஞ்சள் பட்டாணியை தொடர்ந்து, வரியில்லா உளுந்து இறக்குமதியையும் மத்திய அரசு ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது.
மத்திய அரசு சமீபத்தில் மஞ்சள் பட்டாணியின் வரியில்லா இறக்குமதியை, மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது உளுந்திற்கும் இலவச இறக்குமதிக்கான கொள்கையை ஓராண்டுக்கு நீட்டித்து அறிவித்து உள்ளது.
இது குறித்து, தொழில் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:
மஞ்சள் பட்டாணிக்கான வரியில்லா இலவச இறக்குமதி கொள்கை பிப்ரவரி மாதத்துடன் காலாவதியான நிலையில், புதுப்பிக்கப்பட்ட நிபந்தனைகளுடன், மூன்று மாதங்கள் கூடுதலாக, அதாவது மே 31ம் தேதி வரை வர்த்தகர்கள் வரியின்றி இலவசமாக இறக்குமதி செய்து கொள்ளலாம்.
இதேபோன்று, இம்மாதம் 31ம் தேதியுடன் முடிவடைய இருந்த உளுந்து இறக்குமதிக்கான கொள்கையும், 2026 மார்ச் வரை ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, திருத்தப்பட்ட விதிகளின் கீழ், வர்த்தகர்கள் அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதி வரை தாராளமாக உளுந்து இறக்குமதியை தொடரலாம்.
இவ்வாறு தெரிவித்து உள்ளது.