'காமா' கதிர்களை பயன்படுத்தி உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க மத்திய அரசு நிதியுதவி
'காமா' கதிர்களை பயன்படுத்தி உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க மத்திய அரசு நிதியுதவி
ADDED : ஆக 10, 2024 12:43 AM

புதுடில்லி:ஒளிக்கதிர்களை பயன்படுத்தி, பல்வேறு உணவு பொருட்களை பதப்படுத்தும் தொழிற்சாலையை அமைக்க விரும்பும் தொழில் முனைவோர்கள் விண்ணப்பிக்கலாம் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், 1.53 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உணவு பொருட்கள் வீணாகின்றன. அறுவடைக்கு பின்னர் பூச்சி தாக்குதல், போதிய குளிர்பதன கிடங்கு வசதியின்மை உட்பட இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
உணவு பொருட்கள் வீணாவதை தடுப்பதுடன், வேலைவாய்ப்புடன், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வருமானத்தை அதிகரிக்கும் வகையிலும், மத்திய அரசு இத்திட்டத்தை முன்மொழிந்து உள்ளது.
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த போது, நாடு முழுதும் 100 உணவு தரப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு ஆய்வகம் அமைப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். மேலும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர், சர்வதேச சந்தையில் உணவு பொருட்களை விற்பனை செய்ய, வணிக ஏற்றுமதி மையம் அமைக்கப்படுமென அறிவித்திருந்தார்.
அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன், பல்வேறு உணவுப் பொருட்கள் பதப்படுத்துதல் தொழிற்சாலை அமைக்க ஆதரவு அளிக்கப்படும் எனவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், மத்திய உணவு பதப்படுத்துதல் அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:
பழங்கள், காய்கறிகள், தானியங்கள் உள்ளிட்ட உணவு பொருட்கள் மீது 'காமா, பீட்டா' கதிர்களை செலுத்தி, அவற்றில் உள்ள பாக்டீரியா, பூச்சிகள் மற்றும் நுண்ணுயிரிகளை நீக்குவதால், உணவுப் பொருட்கள் எந்த மாற்றமின்றி நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
இத்தகைய ஒளிக்கதிர்களை பயன்படுத்தி, உணவுப் பதப்படுத்தும் ஆலைகள் அமைக்க விருப்பமுள்ள தொழில் முனைவோர்கள், 'பிரதான் மந்திரி கிஷான் சம்பதா யோஜனா' திட்டத்தின் கீழ், www.mofpi.gov.in என்ற இணையதளத்தில், 2024, செப்., 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தில் தேர்வாகும்பட்சத்தில் மானியத்துடன் நிதியுதவி அளிக்கப்படும்.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.