வெடிபொருளுக்கு புதிய சட்டம் கருத்து கேட்கும் மத்திய அரசு
வெடிபொருளுக்கு புதிய சட்டம் கருத்து கேட்கும் மத்திய அரசு
ADDED : மே 02, 2024 12:42 AM

புதுடில்லி:வெடி பொருட்களுக்கான பழைய சட்டத்தை ரத்து செய்து, புதிய சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
வெடி பொருட்களுக்கான தற்போதைய சட்டம் 1884ம் ஆண்டு இயற்றப்பட்டதாகும். இச்சட்டத்தை திருத்தி, இத்துறையில் எளிதாக வணிகம் செய்வதை ஊக்குவிக்கும் வகையில், புதிய சட்டத்தை கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, டி.பி.ஐ.ஐ.டி., எனப்படும், உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை முன்மொழிந்துள்ள 'வெடிபொருட்கள் மசோதா 2024' குறித்து கருத்துக்களை வரவேற்பதாக தெரிவித்துள்ளது.
இப்புதிய மசோதாவில், விதிகளை மீறுவோருக்கு அபராதத்தை அதிகரிக்கவும், உரிமம் வழங்கும் செயல் முறையை சீரமைக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.
மேலும், இப்புதிய சட்டத்தின் கீழ், உரிமம் வழங்குவதற்கும், இடை நிறுத்துவதற்கும், ரத்து செய்வதற்கும் மற்றும் பிற செயல்பாடுகள் குறித்தும் தகுந்த அதிகாரங்களை இச்சட்டத்திற்கு அளிப்பது குறித்து அரசு பரிந்துரைக்கும்.
மேலும், புதிய மசோதாவில் விதிகளை மீறும் வகையில் ஏதேனும் வெடிபொருட்கள் வைத்திருந்தால், பயன்படுத்தினால், விற்பனை செய்தால் அல்லது கொண்டு சென்றால் இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 50,000 அபராதம், அல்லது இரண்டும் விதிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

