செங்கல்பட்டில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி ஆலை: முதல்வர் ஒப்பந்தம்
செங்கல்பட்டில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி ஆலை: முதல்வர் ஒப்பந்தம்
ADDED : செப் 02, 2024 01:13 AM

சென்னை:செங்கல்பட்டில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு, அமெரிக்காவின் 'ஓமியம்' நிறுவனத்துடன் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தொழில் துறை குழுவினர், அமெரிக்கா சென்றுள்ளனர். சான்பிரான்சிஸ்கோவில், கடந்த மாதம் 29ம் தேதி முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது.இதில், 'நோக்கியா, பேபால், ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ்' ஆகிய 6 நிறுவனங்களுடன், 900 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தொடர்ந்து, 30ம் தேதி கூகுள் நிறுவனத்துடன், தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் அமைப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 31ம் தேதி ஓமியம் நிறுவனத்துடன், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
ஓமியம் நிறுவனம், பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி, அளவிடக்கூடிய புரோட்டான் பரிமாற்ற சவ்வு, எலக்ட்ரோலைசர் அமைப்புகளை வடிவமைத்து உற்பத்தி செய்து வருகிறது. பசுமை ஹைட்ரஜன் குழாய்களை, அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியாவில் பல்வேறு இடங்களில் ஓமியம் நிறுவனம் அமைத்துள்ளது.
தமிழக அரசுடன் ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில், 400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், புதிய தொழிற்சாலையை 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஓமியம் நிறுவனம் அமைக்கவுள்ளது. இங்கு எலக்ட்ரோலைசர் மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செய்யப்பட உள்ளது.