ADDED : மே 16, 2024 01:06 AM

புதுடில்லி:ரியல் எஸ்டேட் தொழில்துறையை சரிவில் இருந்து மீட்க, நாடு முழுதும் உள்ள விற்கப்படாத லட்சக்கணக்கான வீடுகளை, உள்ளாட்சி நிர்வாகங்கள் வாங்கும் திட்டத்தை சீனா பரிசீலித்து வருவதாக, 'புளூம்பெர்க்' நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் மேலும் தெரிவித்துஇருப்பதாவது:
சீனாவில், ரியல் எஸ்டேட் தொழில்துறை கடுமையான பாதிப்பை சந்தித்து உள்ளது. இதையடுத்து, விற்கப்படாத லட்சக்கணக்கான வீடுகளை உள்ளாட்சி அமைப்புகள் வாங்குவது குறித்து, அந்நாட்டு அரசு பரிசீலித்து வருகிறது. இத்திட்டம் குறித்து, மாநில கவுன்சில், பல்வேறு மாகாணங்கள் மற்றும் அரசு நிறுவனங்களிடம் இருந்து கருத்துகள் கேட்கப்பட்டு உள்ளது.
மாநில வங்கிகள் வழங்கும் கடன்களைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து விற்கப்படாத வீடுகளை, அதிக தள்ளுபடியில் வாங்குவதற்கு உதவுமாறு, உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான நிறுவனங்களை அரசு கேட்கும். அத்துடன், அரசு வாங்கும் பல சொத்துக்கள், பின்னர் மலிவு விலை வீடுகளாக மாற்றப்படும் என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இத்திட்டம் மற்றும் அதற்கான சாத்திய கூறுகள் குறித்த விபரங்களை அரசு அதிகாரிகள் இன்னும் விவாதித்து வருகின்றனர். இத்திட்டம் இறுதி செய்ய பல மாதங்கள் ஆகலாம் என கருதப்படுகிறது.
இவ்வாறு தெரிவித்து உள்ளது.