'ஈட்டன்' ஆராய்ச்சி மையம் அடிக்கல் நாட்டினார் முதல்வர்
'ஈட்டன்' ஆராய்ச்சி மையம் அடிக்கல் நாட்டினார் முதல்வர்
ADDED : மார் 07, 2025 11:35 PM

சென்னை:அமெரிக்காவைச் சேர்ந்த, 'ஈட்டன்' குழுமத்தின் துணை நிறுவனமான ஈட்டன் எலக்ட்ரிக் இந்தியா நிறுவனம், 200 கோடி ரூபாய் முதலீட்டில், சென்னை சோழிங்கநல்லுாரில் உயர்தர மின் மேலாண்மை கருவிகள் உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான மையம் அமைக்க, முதல்வர் ஸ்டாலின், தலைமை செயலகத்தில், காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
ஈட்டன் குழுமம், 'பார்ச்சூன் 500'ல் இடம்பெற்றுள்ள நிறுவனம். இதன் துணை நிறுவனமான ஈட்டன் எலக்ட்ரிக், தரவு மையங்கள், வாகனங்கள், வான்வெளி, தொழில், வணிகம் என, பல்வேறு துறைகளுக்கு தேவையான உயர்தர மின் மேலாண்மை கருவி உற்பத்தி, வினியோகம், தீர்வு அளிப்பதில் ஈடுபட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின், 2024 செப்டம்பரில் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்த போது, சென்னையில் உற்பத்தி, ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் அமைக்க ஈட்டன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
ஆறு மாதங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு லட்சம் சதுர அடியுடன் மேம்பட்ட உற்பத்தி தளங்கள், ஆராய்ச்சி மேம்பாட்டிற்கான வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது. இதன் வாயிலாக, 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.