ADDED : மே 21, 2024 08:01 AM

புதுடில்லி: இந்தியாவின் சரக்கு மற்றும் சேவைகள் ஏற்றுமதியை போட்டித்தன்மை நிறைந்ததாக மாற்றும் நோக்கில், அதற்கு தேவைப்படும் மூலப் பொருட்கள் இறக்குமதிக்கான கலால் வரியை, மத்திய அரசு ரத்து செய்திருந்தது. இதற்கு கைமாறாக, நிறுவனங்கள் சில ஏற்றுமதி கடமைகளை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இறக்குமதிக்கான கலால் வரி விலக்கையும் பெற்று, ஏற்றுமதி கடமைகளையும் நிறைவேற்றத் தவறிய நிறுவனங்கள் மீது, வழக்கு தொடுக்கப்பட்டது. இதனால், இந்த நிறுவனங்கள் மீதான வரி மற்றும் வட்டி சுமையும் அதிகரித்தது.
இதையடுத்து, மத்திய அரசு, கடந்த 2023ம் ஆண்டு வெளியிட்ட அன்னிய வர்த்தக கொள்கையில், இந்நிறுவனங்களுக்கு உதவி செய்யும் வகையில், பொது மன்னிப்பு திட்டம் ஒன்றை அறிவித்தது.
இதன்படி, விலக்கு அளிக்கப்பட்ட முழு கலால் வரியையும்; அதற்கான 100 சதவீத வட்டியையும் சேர்த்து செலுத்தும் நிறுவனங்களுக்கு, வழக்குகளிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் நிறுவனங்கள் கடந்த மார்ச் 31ம் தேதிக்கு முன்னதாக, மேற்கண்ட உத்தரவை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இத்திட்டத்தின் வாயிலாக 6,705 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும்; அதன் வாயிலாக 852 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளதாகவும் மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

