ADDED : ஜூலை 02, 2024 11:16 PM

சென்னை:கடந்த ஜூன் மாதத்தில் வர்த்தக வாகனங்கள் விற்பனை 2.47 சதவீதம் சரிவு கண்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 79,456 வாகனங்கள் விற்பனையான நிலையில், கடந்த மாதத்தில் 77,418 வாகனங்களே விற்பனை செய்யப்பட்டுள்ளன. வர்த்தக வாகன சந்தையில் முன்னணியில் இருக்கும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை அதிகபட்சமாக 8 சதவீதம் வரை குறைந்துள்ளது.
அதே சமயம், விற்பனை வளர்ச்சியில், இசுசூ எஸ்.எம்.எல்., நிறுவனம் முதல் இடத்தை பிடித்துள்ளது. முதல் முறையாக வாகனம் வாங்குபவர்களுக்கு நிதி கிடைப்பதில் சில தடைகள் இருந்ததால், சிறிய ரக வர்த்தக வாகன விற்பனை சற்று தொய்வு அடைந்துள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், பள்ளிப் போக்குவரத்துக்கு தேவையான கன ரக மற்றும் நடு ரக வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.
பருவமழை, அரசின் கொள்கை தொடர்ச்சி மற்றும் கட்டுமானத் துறையின் தொடர் வளர்ச்சி ஆகியவை, வர்த்தக வாகனங்களின் விற்பனையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.