ADDED : ஜூலை 21, 2024 02:47 AM

சென்னை:அரசு ஒப்புதல் அளித்தும், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், வேளாண் தொழில் பெரு வழித்தடம் அமைக்கும் பணி தாமதமாகிறது.
தமிழகத்தில், தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், வேளாண் சாகுபடியே முதன்மை தொழில். எனவே, அம்மாவட்டங்களில் வேளாண் பொருட்களை, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக்கும் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில் நிறுவனங்கள் துவக்குவதை அரசு ஊக்குவிக்கிறது.
இதற்காக, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, திருச்சி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி, 1,070 கோடி ரூபாயில் வேளாண் தொழில் வழித்தடம் அமைக்க, கடந்த ஆண்டு இறுதியில் அரசு ஒப்புதல் அளித்தது.
இத்திட்டத்தின் கீழ் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பயன்பெற, நவீன இயந்திரங்களுடன் கூடிய பொது வசதி மையங்களும், புதிய தொழிற்பேட்டைகள், கிடங்குகளும் அமைக்கப்பட உள்ளன.
தொழில் துவங்கும் நிறுவனங்களுக்கு, அரசு மானியம் வழங்கப்படும். தஞ்சையில் உணவுத் தொழில் பூங்கா; குளிர்ப்பதன கிடங்குகள், சாலை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
தொழில் வழித்தடத் திட்டத்தை செயல்படுத்தும் பணியை, உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனம் மேற்கொள்கிறது.
திட்டத்தை துவக்க அரசு கடந்த ஆண்டு இறுதியில் ஒப்புதல் அளித்த நிலையில், திட்ட பணிகளை கண்காணிக்கும் கண்காணிப்பு பிரிவை ஏற்படுத்தும் பணி மட்டுமே இந்தாண்டு ஆரம்பத்தில் துவங்கியது. மற்ற பணிகள் துவக்கப்படாமல் தாமதமாகி வருகிறது.
அரசு அளித்துள்ள அவகாசத்தின்படி, தொழில் வழித்தடப் பணிகளை இந்த நிதியாண்டில் துவக்கி, 2027 - 28க்குள் முடிக்கப்பட வேண்டும்.
எனவே, உயரதிகாரிகள் தொடர் ஆய்வு நடத்தி, வழித்தடப் பணிகளை முழுவீச்சில் துவக்கி, முடிக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.