ADDED : மே 02, 2024 10:36 PM

சென்னை: ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில், 1,000 கோடி ரூபாய் செலவில், பாஸ்போரிக் அமிலம் தயாரிக்கும் ஆலையை அமைக்கும் பணிகளை, 'கோரமண்டல்' நிறுவனம் துவங்கி உள்ளது.
'ஆத்ம நிர்பர் பாரத்' திட்டத்தின்படி, நம் நாட்டின் தேவைகளை, நம் ஆலைகளின் வாயிலாக உற்பத்தி செய்யும் வகையில், அடுத்த இரண்டாண்டுகளில் உற்பத்தியை துவக்க கோரமாண்டல் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
இதன் வாயிலாக, பாஸ்பேட்டிக் உரங்கள் தயாரிப்பில் 50 சதவீத தேவையை இந்த அமில உற்பத்தியால் சமாளிக்க முடியும். அதாவது, டி.ஏ.பி., - என்.பி.கே., உரத்தயாரிப்பில், இந்த அமிலங்கள் மூலப்பொருட்களாக பயன்படுவதால், உரத்தட்டுப்பாட்டை தவிர்க்க முடியும்.
இதுகுறித்து, நிர்வாக இயக்குனர் அருண் அழகப்பன் கூறியதாவது:
பாஸ்போரிக் அமில ஆலையில், தினமும் 650 டன்னும், சல்பியூரிக் அமில ஆலையில், தினமும் 1,800 டன்னும் உற்பத்தி செய்யப்படும். இதன் கழிவு, வெப்பத்தில் இருந்து ஆற்றலை தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிறுவன தயாரிப்புகள் சென்னையின் எண்ணுார், ஆந்திராவின் விசாகப்பட்டினம் துறைமுகங்களுடன் இணைக்கப்பட்டு, உர உற்பத்தி ஆலைகளுக்கான மூலப்பொருட்கள் அனுப்பப்படும்.
அதன்படி, நாட்டின் இரண்டாவது பெரிய அமில உற்பத்தி தொழிற்சாலையாக இது மாறும். இதில் பாதுகாப்புடன் கூடிய உயர் தொழில்நுட்பங்களை கையாள பெல்ஜியம், அமெரிக்க நிறுவனங்களுடன் ஒப்பத்தம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.