ADDED : மே 29, 2024 01:32 AM

புதுடில்லி: கடந்த 2023 - 24ம் நிதியாண்டில், இந்தியாவின் கடல் உணவு பொருட்களின் ஏற்றுமதி, 9 சதவீதம் குறைந்து, 61,171 கோடி ரூபாயாக இருந்ததாக, வர்த்தக அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தேவைகள் குறைந்ததால், கடந்த நிதியாண்டில் கடல் பொருட்களின் ஏற்றுமதி 8.74 சதவீதம் குறைந்து, 61,171 கோடி ரூபாயாக இருந்தது.
முந்தைய ஆண்டான 2022 - 23ல், மதிப்பு அடிப்படையில் 67,147 கோடி ரூபாய் மற்றும் அளவின் அடிப்படையில் 17.36 லட்சம் டன் அளவிற்கு கடல் உணவு ஏற்றுமதி செய்யப்பட்டு இந்தியா சாதனை படைத்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில், கடல் உணவு ஏற்றுமதியை 1 லட்சம் கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
தேவையில் சரிவு, வளர்ந்த நாடுகளின் அதிக பணவீக்கம் மற்றும் தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் இருந்து அமெரிக்காவிற்கு உறைந்த இறால்களின் ஏற்றுமதி அதிகரிப்பு ஆகியவற்றால், இந்திய கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி, கடந்த நிதியாண்டில் வீழ்ச்சியை சந்தித்தது.
இருப்பினும், தற்போது, ஈக்வடார் மீது அமெரிக்கா பொருள் குவிப்பு தடுப்பு வரி விதித்துள்ளதால், இந்திய நிறுவனங்களின் ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஏற்றுமதியாளர்கள் கருதுகின்றனர்.
ஏற்றுமதி
2022 - 23 : ரூ. 67,147 கோடி
2023 - 24 : ரூ. 61,171 கோடி
சரிவுக்கு காரணங்கள்
*தேவையில் சரிவு
*பணவீக்கம்
*ஈக்வடார் ஏற்றுமதி