ராணுவம் தொடர்பான ஏற்றுமதி முதல் காலாண்டில் 78% உயர்வு
ராணுவம் தொடர்பான ஏற்றுமதி முதல் காலாண்டில் 78% உயர்வு
UPDATED : ஆக 14, 2024 06:58 AM
ADDED : ஆக 14, 2024 12:09 AM

புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், ராணுவம் தொடர்பான தயாரிப்புகளின் ஏற்றுமதி, 78 சதவீதம் உயர்ந்துள்ளதாக, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், 3,885 கோடி ரூபாய் அளவில் ஏற்றுமதி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், 6,915 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
உலகளாவிய ராணுவ தயாரிப்பு சந்தையில், இந்தியாவின் தொடர் வளர்ச்சிக்கு, வலுவான உள்நாட்டு தயாரிப்பு மற்றும் சரியான கொள்கை திருத்தங்கள் ஆகியவை முக்கிய காரணங்களாக அமைந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 2022- - 23 நிதியாண்டில், உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஏற்றுமதி ஒப்புதல்கள் 1,414 ஆக இருந்த நிலையில், கடந்த நிதியாண்டில் அது 1,507 ஆக அதிகரித்துள்ளன.
'டோர்னியர் 228' கடல் ரோந்து விமானம், 'பிரமோஸ்' ஏவுகணைகள், 'பினாக்கா ராகெட் லாஞ்சர்' அமைப்பு, ராணுவ கவச வாகனங்கள், ரேடார்கள் உள்ளிட்ட பல ராணுவ தயாரிப்புகளை இந்தியா ஏற்றுமதி செய்து வருவதாக, பாதுகாப்புத் துறை அமைச்சகம் குறிப்பிட்டுஉள்ளது.
கடந்த 2017ம் ஆண்டை ஒப்பிடுகையில், ராணுவத்துக்கான தயாரிப்பு ஏற்றுமதி 12 மடங்கு உயர்ந்துள்ளதாக, கடந்த நிதியாண்டுக்கான பொருளாதார கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.