சென்னையில் சிறுதொழில் துறையினருக்காக தனியாக வர்த்தக மையம் அமைக்க கோரிக்கை
சென்னையில் சிறுதொழில் துறையினருக்காக தனியாக வர்த்தக மையம் அமைக்க கோரிக்கை
ADDED : பிப் 27, 2025 11:23 PM

சென்னை:சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கண்காட்சி நடத்துவதற்கு அதிக செலவு ஏற்படுவதால், கிண்டியில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்த, தனியாக ஒரு வர்த்தக மையம் அமைக்குமாறு, தமிழக அரசுக்கு சிறு தொழில் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை நந்தம்பாக்கத்தில் தமிழக அரசுக்கு வர்த்தக மையம் உள்ளது. அங்கு, பல்வேறு தொழில் துறையினர் ஆண்டு முழுதும் மாநாடு, கண்காட்சி நடத்தி, வெளிநாட்டு பிரதிநிதிகளை வரவழைக்கின்றனர்.
இதில், புதிய தொழில்நுட்பங்கள் குறித்து ஆலோசிப்பதுடன், தொழில் நிறுவனங்களின் தயாரிப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டு, விற்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஆனால், சிறு, குறு நிறுவனங்களால் வர்த்தக மையத்தில் கண்காட்சிகள் நடத்த முடிவதில்லை. காரணம், அதிக செலவு ஆகிறது என்பதுதான். இதனால், சிறு, குறு, நிறுவனங்களின் தயாரிப்புகளை காட்சிப்படுத்த, கிண்டியில் தனியாக ஒரு வர்த்தக மையம் அமைக்க, இத்தொழில் துறையினர் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.
இதுகுறித்து, சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினர் கூறியதாவது:
தமிழக சிறு நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு, வெளிநாடுகளில் அதிக தேவை உள்ளது. ஆனால், பல நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்வதற்கான நடைமுறை தெரியவில்லை.
இதற்காக வெளிநாட்டு பிரதிநிதிகள், பொதுத்துறை, பெரிய தொழில் நிறுவனங்களை அழைத்து வந்து, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கண்காட்சி நடத்தினால், மூன்று நாட்களுக்கு 75 லட்சம் முதல், 1 கோடி ரூபாய் வரை செலவாகிறது. ஆனால், இந்தளவுக்கு நிதி இல்லை.
எனவே, சென்னை நுழைவாயிலான கிண்டி தொழிற்பேட்டையில் சிறு, குறு நிறுவனங்களின் தயாரிப்புகளுக்காக, தனி வர்த்தக மையம் அமைத்து தர, அரசு நடவடிக்கை வேண்டும். அங்கு மாதத்திற்கு ஒருமுறை வாங்குவோர், விற்போர் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி, தயாரிப்புகளை விற்க உதவி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.