கட்டுமான நிறுவனங்கள் திறன் குறைவால் 5.08 லட்சம் வீடுகள் கட்டும் பணி முடக்கம்
கட்டுமான நிறுவனங்கள் திறன் குறைவால் 5.08 லட்சம் வீடுகள் கட்டும் பணி முடக்கம்
ADDED : ஆக 15, 2024 10:18 PM

புதுடில்லி:நாட்டிலுள்ள 42 நகரங்களில், 5.08 லட்சம் வீடுகளை கொண்ட 2,000 கட்டுமானத் திட்டங்கள் முடங்கி இருப்பதாக, சொத்து ஆலோசனை நிறுவனமான பிராப்ஈக்விட்டி தெரிவித்து உள்ளது.
நாடு முழுதும் மொத்தம் 1,981 கட்டுமானத் திட்டங்கள் நிறுத்தப்பட்டு உள்ளதால், 5.08 லட்சம் வீடுகள் கட்டும் பணி முடங்கி உள்ளது.
இதில், அதிகபட்சமாக 14 முதல் நிலை நகரங்களில், 1,636 கட்டுமானத் திட்டங்கள் நிறுத்தப்பட்டு, 4,31,946 வீடுகள் கட்டும் பணி முடங்கி உள்ளது. 28 இரண்டாம் நிலை நகரங்களில், 345 கட்டுமானத் திட்டங்கள் நிறுத்தத்தால், 76,256 வீடுகள் கட்டும் பணி முடங்கி உள்ளது.
இது குறித்து, பிராப்ஈக்விட்டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சமிர் ஜசுஜா கூறியதாவது:
கட்டுமான திட்டங்கள் முடக்கத்திற்கு, கட்டுமான நிறுவனங்களின் செயல்திறன் குறைவு, மோசமான நிதி மேலாண்மை ஆகியவை முக்கிய காரணங்களாகும். கட்டுமான நிறுவனங்கள் தங்களிடம் உள்ள நிதி ஆதாரத்தை, புதிய நிலத்தை வாங்குவதற்கும், வங்கி அல்லது பிற கடன்களை அடைக்கவும் பயன்படுத்துகின்றன.
பல்வேறு நீதிமன்றங்களில், ரியல் எஸ்டேட் தொடர்பான வழக்குகள் அதிகரித்து கொண்டே செல்வதும், முடக்கத்திற்கு காரணமாகும். எனவே, வீடு வாங்கும் முன்னர், உரிய சட்ட வல்லுனர்களின் ஆலோசனையை நாட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையில், 92 கட்டுமானத் திட்டங்கள் நிறுத்தப்பட்டு உள்ளதால், 21,867 வீடுகள் கட்டும் பணிகள் முடங்கி உள்ளன

