மின்சார ஸ்கூட்டர், பைக் விற்பனை ஏப்ரல் மாதத்தில் பாதியாக சரிந்தது
மின்சார ஸ்கூட்டர், பைக் விற்பனை ஏப்ரல் மாதத்தில் பாதியாக சரிந்தது
ADDED : மே 10, 2024 10:32 PM

பெங்களூரு:கடந்த ஏப்ரல் மாதத்தில், மின்சார இரு சக்கர வாகன விற்பனை, முந்தைய மார்ச் மாதத்தை விடவும், 50 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மின்சார வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக, மத்திய அரசு, கடந்த 2015ம் ஆண்டில், 'பேம் - 1' திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ், மின்சார வாகனங்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வந்தது.
பேம் - 1 திட்டம், 2019 மார்ச்சில் முடிவடைந்ததை அடுத்து, பேம் - 2 திட்டம் 2019 ஏப்ரலில் அறிமுகப்படுத்தப்பட்டது.
கடந்த 2022 மார்ச் மாதத்துடன் நிறைவடைய இருந்த இத்திட்டம், இரண்டு ஆண்டுகளுக்கு, அதாவது, மார்ச் 31, 2024 வரை நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து, பேம் - 3 திட்டம், ஜூலையில் நடைபெற உள்ள மத்திய அரசு பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், 500 கோடி ரூபாய் முதலீட்டில், இ.எம்.பி.எஸ்., எனும் புதிய மின் வாகன கொள்கை, கடந்த மார்ச்சில் அறிமுகப்படுத்தப்பட்டது. மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்ட இத்திட்டம், ஏப்ரல் 1, 2024 முதல் ஜூலை 31, 2024 வரை செயல்பாட்டில் இருக்கும்.
இத்திட்டத்தின் கீழ், மின்சார இரு சக்கர வாகனங்களுக்கு, 10,000 ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது. எனினும், கடந்த ஏப்ரல் 1ம் தேதிக்கு முன் தயாரிக்கப்பட்ட வாகனங்களுக்கு, இந்த மானியம் பொருந்தாது.
நிறுவனங்கள் புதிய மானிய கொள்கைக்கு ஏற்ப, தங்கள் தயாரிப்பு திட்டத்தை மாற்ற எண்ணியுள்ளதால், தங்கள் தயாரிப்பை குறைத்துள்ளன.
இதன் காரணமாக, மின்சார இரு சக்கர வாகன தயாரிப்பாளர்களின் தயாரிப்பு மற்றும் விற்பனை, ஏப்ரலில் சரிந்ததாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
மின்சார இருசக்கர வாகன விற்பனை
காலம் எண்ணிக்கை
நிறுவனம் விற்பனை(மார்ச் 2024 ஏப்ரல் 2024)