ADDED : ஜூலை 07, 2024 01:50 AM

புதுடில்லி:ஜூன் மாதத்திற்கான மின்சார வாகன விற்பனை அறிக்கையை, ஆட்டோமொபைல் முகவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டு உள்ளது.
இந்தியாவில் மின்சார வாகன விற்பனை 35.65 சதவீதம் உயர்ந்து, அபரிமிதமான வளர்ச்சியை கண்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 1.02 லட்சம் மின்சார வாகனங்கள் விற்பனையான நிலையில், இந்த ஜூனில் 1.39 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து, ஆட்டோமொபைல் முகவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மனீஷ் ராஜ் சிங்கானியா கூறியதாவது:
கடந்த ஜூன் மாதத்தில், பெரும்பாலான மின்சார வாகனங்களின் விற்பனை நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளதால், நிலையான போக்குவரத்தை நோக்கி காலம் மாறி வருவது தெளிவாகிறது.
எதிர்வரும் பருவமழை மற்றும் மின்சார வாகனங்களுக்கு சாதகமான அரசின் கொள்கைகள் ஆகியவை, விற்பனையை மேலும் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.