'பிரிட்டானியா'வின் கோல்கட்டா ஆலை விருப்ப ஓய்வுக்கு ஊழியர்கள் சம்மதம்
'பிரிட்டானியா'வின் கோல்கட்டா ஆலை விருப்ப ஓய்வுக்கு ஊழியர்கள் சம்மதம்
ADDED : ஜூன் 25, 2024 10:13 PM

கோல்கட்டா : கோல்கட்டாவில் உள்ள ஆலையில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் அனைவரும், நிறுவனத்தின் விருப்ப ஓய்வு திட்டத்தை ஏற்றுக்கொண்டுவிட்டதாக பிரிட்டானியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோல்கட்டாவில் உள்ள தாரதாலாவில், பிரிட்டானியா நிறுவனத்தின் பழமையான தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்தது.
இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவருக்கும், விருப்ப ஓய்வு வழங்கும் திட்டத்தை, பிரிட்டானியா நிறுவனம் சமீபத்தில் அறிவித்துஇருந்தது.
நிர்வாகத்தின் இந்த முடிவை, தற்போது அனைத்து நிரந்தர தொழிலாளர்களும் ஏற்றுக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்முடிவால், நிறுவனத்தின் வணிக நடவடிக்கைகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 5 ஆண்டு 11 மாதம் வரை பணிக்காலம் மீதமுள்ள பணியாளர்களுக்கு 13 லட்சம் ரூபாயும், 6 முதல் 10 ஆண்டுகள் வரை பணிக்காலம் மீதமுள்ளவர்களுக்கு 18.5 லட்சம் ரூபாயும், 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு 22.25 லட்சம் ரூபாயும் வழங்குவதாக பிரிட்டானியா நிர்வாகம் தெரிவித்துஉள்ளது.
பிரிட்டானியாவின் பழமையான ஆலைகளில் ஒன்றான இந்த ஆலை எழுபது ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆலையின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. உற்பத்தி நிறுத்தம் பற்றிய கேள்விகளுக்கு பிரிட்டானியா பதிலளிக்கவில்லை.
கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் பழமையான இந்த ஆலையின் நிரந்தர பணியாளர்கள் அனைவரும், விருப்ப ஓய்வு திட்டத்துக்கு சம்மதித்துள்ளனர்