ADDED : மே 08, 2024 12:29 AM

சென்னை: புதிய தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தமிழக அரசு கடந்த ஆண்டிற்கு, 876 நபருக்கு, 91 கோடி ரூபாய் மானியம் வழங்குகிறது.
தமிழக சிறு,குறு, நடுத்தர தொழில் துறை, படித்த இளைஞர்களை தொழில்முனைவேராக்க, புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்துகிறது.
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில், 15 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும்.
பின், வங்கிகள் அல்லது அரசு தொழில் முதலீட்டு கழகம் வாயிலாக, கடன் உதவி வழங்கப்படுகிறது.
தொழில் திட்ட மதிப்பீட்டில், 25 சதவீதம் அல்லது 75 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் மூலதன மானியமும், கடனை திருப்பி செலுத்தும் வரை, 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படுகிறது.
எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு கூடுதலாக, 10 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. திட்ட மதிப்பீடு குறைந்தபட்சம், 10 லட்சம் ரூபாய் மற்றும் அதிகபட்ச மதிப்பீடு, 5 கோடி ரூபாய் வரை இருக்க வேண்டும்.
இத்திட்டத்தில் கடந்த ஆண்டில், 1,012 நபருக்கு, 172.57 கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதில், 876 நபருக்கு, 91 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
படித்த இளைஞர்களை முதல் தலைமுறை தொழில்முனைவராக, மானியத்துடன் கூடிய நிதி உதவி வழங்கப்படுகிறது. இதற்கு, தொழில் வணிக ஆணையரகத்தில் விண்ணப்பிக்கலாம்.
குறைந்தபட்ச கல்வி தகுதி பிளஸ் 2 தேர்ச்சி. டிகிரி, டிப்ளமா, ஐ.டி.ஐ., முடித்தவர்களும், விண்ணப்பிக்கலாம்.
பயன்ெபற விரும்புவோர், மாவட்ட தொழில் மையங்களுக்கு சென்றால், உரிய ஆலோசனைகளும், வழிகாட்டுதலும் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

