பங்கு சார்ந்த பண்டு முதலீடுகள் மே மாதத்தில் 83% அதிகரிப்பு
பங்கு சார்ந்த பண்டு முதலீடுகள் மே மாதத்தில் 83% அதிகரிப்பு
ADDED : ஜூன் 10, 2024 11:27 PM
புதுடில்லி : கடந்த மே மாதத்தில், பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் 83 சதவீதம் அதிகரித்து, 34,697 கோடி ரூபாயாக இருந்தது என, 'ஆம்பி' எனும், இந்திய மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரலில், இப்பிரிவில் 18,917 கோடி ரூபாய் மட்டுமே முதலீடு செய்யப்பட்டிருந்தது.
துறை ரீதியான பண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
தொடர்ந்து இரண்டாவது மாதமாக, கடந்த மாதமும் எஸ்.ஐ.பி., முறையில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் 20,000 கோடி ரூபாயை தாண்டியது. கடந்த ஏப்ரலில் 20,371 கோடி ரூபாயாக இருந்த எஸ்.ஐ.பி., முதலீடு, மே மாதத்தில் 20,904 கோடி என்ற புதிய உச்சத்தை எட்டியது.
ஹைபிரிட் பண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள், 9 சதவீதம் சரிவைக் கண்டுள்ளன.
ஒட்டுமொத்தமாக, மே மாதத்தில், மியூச்சுவல் பண்டு திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் 54 சதவீதம் சரிந்து, 1.11 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இதற்கு முந்தைய மாதமான ஏப்ரலில், மியூச்சுவல் பண்டுகளில் 2.40 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.