ADDED : மார் 07, 2025 11:02 PM

புதுடில்லி:இ.எஸ்.ஐ.சி., எனும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம், தன் வசம் உள்ள உபரி நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு ஒப்புதல் கோரி செபியிடம் விண்ணப்பித்துள்ளது.
பி.எப்., அமைப்பு ஏற்கனவே பங்குச் சந்தையில் முதலீடு செய்து வரும் நிலையில், இப்போது இ.எஸ்.ஐ., அமைப்பும் தயாராகி வருகிறது.
தொழிலாளர்களின் சமூக பொருளாதார பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டது இ.எஸ்.ஐ.சி., அமைப்பு.
மாத வருமானம் 21,000 ரூபாய்க்கு குறைவாக உள்ள தொழிலாளர்கள் மற்றும் அவர்களை பணியமர்த்தியுள்ள நிறுவனங்கள் இணைந்து, தொழிலாளரின் மாதாந்திர சம்பளத்தில் மொத்தம் 4 சதவீதத்தை காப்பீடுக்காக செலுத்துகின்றனர். இதன் வாயிலாக, தொழிலாளர்களுக்கு காப்பீடு, மருத்துவ வசதி வழங்கப்படுகிறது.
இ.எஸ்.ஐ.சி.,யின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த நிதி, அரசு கடன் பத்திரங்கள், வங்கி பிக்சட் டிபாசிட்கள் மற்றும் ஸ்பெஷல் டிபாசிட் கணக்குகள் ஆகியவற்றில் மட்டுமே முதலீடு செய்யப்பட்டு வருகின்றன.
இவை அனைத்துமே குறைந்த ரிஸ்க் கொண்டது என்றாலும், இவற்றிலிருந்து கிடைக்கும் வட்டி அல்லது லாபமும் குறைவாகவே இருக்கும்.
தற்போது கிட்டத்தட்ட 1.49 லட்சம் கோடி ரூபாய் இவ்வாறு முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொழிலாளர்களுக்கு அதிக பலன் கிடைக்கும் வகையில், உபரி நிதியை இ.டி.எப்., எனும் எக்ஸ்சேஞ்ச் டிரேடட் பண்டு வாயிலாக பங்குச் சந்தைகளில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்ட, இ.எஸ்.ஐ.சி., திட்டமிட்டுள்ளது.
இதற்கு அனுமதிக்கக்கோரி செபியிடம் விண்ணப்பித்துள்ளது.