ADDED : ஜூன் 15, 2024 12:57 AM

புதுடில்லி:கடந்த மே மாதம், நாட்டின் சரக்கு ஏற்றுமதி 9.10 சதவீதம் அதிகரித்து, 3.16 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் நடப்பு நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில், நாட்டின் சரக்கு ஏற்றுமதி 5.10 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இதுதொடர்பாக மேலும் தெரிவித்துள்ளதாவது:
கடந்த மாதம், நாட்டின் சரக்கு ஏற்றுமதி 3.16 லட்சம் கோடி ரூபாயாகவும்; இறக்குமதி 5.14 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தது. இதனால் வர்த்தகப் பற்றாக்குறை 1.98 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
வளர்ச்சி
நடப்பு நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களுக்கான சரக்கு ஏற்றுமதி 6.07 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 5.77 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. சரக்கு இறக்குமதி, 9.63 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஏற்றுமதியில் கடந்த மாதம் மின்னணு பொருட்கள், மருந்துகள், ஜவுளி மற்றும் பிளாஸ்டிக் துறைகள் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளது. இத்துறைகளின் வலுவான செயல்பாடுகளே, உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற சூழலுக்கு மத்தியிலும், ஏற்றுமதியை அதிகரிக்க உதவியது.
எண்ணெய்
இறக்குமதியைப் பொறுத்தவரை, கடந்த மாதம் எண்ணெய் இறக்கு மதி 28 சதவீதம் அதிகரித்து, 1.66 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
தங்கம் இறக்குமதி, கடந்தாண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு மே மாதம் சற்றே குறைந்து, 27,640 கோடி ரூபாயாக இருந்தது.
இவ்வாறு தெரிவித்துஉள்ளது.