ADDED : மார் 24, 2024 12:30 AM

புதுடில்லி,:வெங்காயம் மீதான ஏற்றுமதி தடை, மறு உத்தரவு வரும் வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உள்நாட்டில் வெங்காயம் கிடைப்பதை அதிகரிக்கவும், அதன் விலையை கட்டுக்குள் வைத்திருக்கவும், வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. இந்த தடை இம்மாதம் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், ஏற்றுமதிக்கான தடை, மறு உத்தரவு வரும் வரை நீட்டிக்கப்படுவதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான விவகாரங்களை கையாண்டு வரும் டி.ஜி.எப்.டி., எனப்படும், வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:
வெங்காய உற்பத்தி, 2023 ராபி பருவத்தில், 2.27 கோடி டன்களாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2023 டிசம்பர் 8ம் தேதி, வெங்காய ஏற்றுமதிக்கு அரசு தடை விதித்தது. நட்பு நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய, அமைச்சகங்களுக்கு இடையேயான குழுவின் ஒப்புதலுக்கு பின் அனுமதிக்கப்படுகிறது.
தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனத்தின் வாயிலாக 64,400 டன் வெங்காயம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் வங்கதேசத்திற்கு ஏற்றுமதி செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது.
விலைவாசியை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த 2023 அக்டோபர் 28 முதல், டிசம்பர் 31ம் தேதி வரையிலான காலகட்டத்தில், வெங்காய ஏற்றுமதியில் டன் ஒன்றுக்கு 66,400 ரூபாய் என்ற குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை நிர்ணயித்தது.
மேலும், கடந்த ஆகஸ்ட் மாதம், வெங்காய ஏற்றுமதிக்கு, 2023 டிசம்பர் 31ம் தேதி வரை 40 சதவீத ஏற்றுமதி வரியை விதித்தது.
இவ்வாறு தெரிவித்து உள்ளது.

