ADDED : ஜூன் 25, 2024 10:14 PM

புதுடில்லி : ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், முதலீடுகள் தொடர்பாக அவரது பெயரில் பரப்பப்படும் போலி வீடியோக்களுக்கு எதிராக கவனமாக இருக்குமாறு பொதுமக்களை எச்சரித்துஉள்ளார்.
பங்குச்சந்தை முதலீடு குறித்த ஆலோசனைகளை வழங்குவது போல், ரகுராம் ராஜன் பெயரில் சமூக ஊடகங்களில் வீடியோக்கள் சித்தரிக்கப்படுகின்றன.
இவை போலியானவை எனவும், இத்தகைய மோசடியில் ஈடுபடுபவர்கள் குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்ய வேண்டும் எனவும், ரகுராம் ராஜன் தெரிவித்து உள்ளார்.
பொதுமக்களுக்கு முதலீட்டு ஆலோசனைகளை வழங்குவதில்லை எனவும், எந்தவொரு நிறுவனத்தின் பங்கையும் விளம்பரப்படுத்தியதில்லை எனவும் அவர் தெரிவித்துஉள்ளார்.
இதுகுறித்து, ரகுராம் ராஜன் தன் லிங்க்டின் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
நிதி தேவை மற்றும் இடர் தாங்கும் தன்மை என்பது நபர்களை பொறுத்து மாறுபடுகிறது. பொதுவாக, முதலீட்டாளர்கள் தனிப்பட்ட பங்குகளை வாங்குவதை விட, வங்கி டிபாசிட், கடன் பத்திரங்கள் மற்றும் பங்குகள் போன்ற பல்வகைபட்ட முதலீடுகளை வைத்திருப்பது நல்லது.
சரியான திட்டமின்றி மேற்கொள்ளப்படும் முதலீடு, உங்களை பணக்காரராக மாற்றுவதை விட, ஏழையாக மாற்றுவதற்கு வாய்ப்பு அதிகம். நான் பரிந்துரைத்ததாக கூறப்படும் அனைத்து முதலீடு வீடியோக்களையும் புறக்கணிக்கவும்.
இவ்வாறு பதிவிட்டு உள்ளார்.