ADDED : ஏப் 23, 2024 07:06 AM

புதுடில்லி : பொதுத்துறை வங்கியான 'யூனியன் பேங்க் ஆப் இந்தியா'வின் செயலியைப் போன்றே வடிவமைக்கப்பட்டுள்ள போலியான செயலி, இணையத்தில் வலம் வருவதாகவும்; ஸ்மார்ட்போன் பயனர்கள் இதுகுறித்து கவனமாக இருக்குமாறும் மத்திய அரசு எச்சரித்து உள்ளது.
'யூனியன் - ரிவார்ட்ஸ் ஏ.பி.கே.,' என்ற பெயரில் வலம் வரும் இந்த செயலி, யூனியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு வெகுமதிகளை வழங்குவதாக உறுதியளித்து, அவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை எடுத்துவிடுவதாக, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் ஏமாற்றி, செயலியைப் பதிவிறக்க வைத்து, அவர்களிடமிருந்து நிதி மோசடி செய்யப்படுவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட தளமான 'சைபர் தோஸ்த்' இந்த போலி செயலியை அடையாளம் கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்கள், இந்த போலி செயலி குறித்து கவனமாக இருக்குமாறு உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
'யூனியன் - ரிவார்ட்ஸ் ஏ.பி.கே.,' என்ற பெயரிலான செயலி, யூனியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு வெகுமதிகளை வழங்குவதாக உறுதியளித்து, அவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை அபகரித்து விடுகிறது.

