ADDED : ஜூன் 28, 2024 02:31 AM

சென்னை:வங்கிகளில் வசூலிக்கப்படும் பல்வேறு கட்டணங்களை குறைப்பது, விவசாயிகளுக்கு பூச்சிக்கொல்லி, உரம் உபயோகிக்க பயிற்சி வழங்குவது உள்ளிட்ட அம்சங்களை பட்ஜெட்டில் அறிவிக்குமாறு, உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, சங்க தலைவர் வேல்சங்கர், கவுரவ ஆலோகர் ஜெயபிரகாசம், மத்திய நிதி அமைச்சர், வேளாண் துறை அமைச்சர், சுகாதார துறை அமைச்சர், உணவு பதப்படுத்தும் தொழில் துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கு அனுப்பிய மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
ஜி.எஸ்.டி., அமலான முதல் ஐந்து ஆண்டுகளில் திட்டமிடாமல் தவறுகள் நடந்திருந்தால், அதற்கு உரிய வரி, வட்டி, அபராதத்தை தள்ளுபடி செய்ய வலியுறுத்துகிறோம்.
சமீபத்தில் நடந்த கவுன்சில் கூட்டத்தில் மூன்று ஆண்டுகளுக்கு வட்டி, அபராதம் இல்லை என்று அறிவிக்கப்பட்டிருப்பதை, ஐந்து ஆண்டுகளாக அதிகரிக்க வேண்டும்.
வேளாண் விளைபொருட்களில் அதிக பூச்சிக்கொல்லி, உரம் இருப்பதை சுட்டிக் காட்டிய நிலையில், மத்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம், மாதிரி எடுத்து பரிசோதனை செய்து அறிக்கை வழங்கும்படி கூறியது.
ஒரு பொருளுக்கு, 20 லட்சம் ரூபாய் செலவாகும். இது, அரசால் செய்யப்பட வேண்டியது. இதற்கு வரும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டுகிறோம்.
பிளாஸ்டிக்கிற்கு மாற்று பொருட்கள் கிடைக்கும் வரை, பிளாஸ்டிக் தடை சட்டத்தை படிப்படியாக அமல்படுத்த வேண்டும்.
மஞ்சள் பட்டாணி இறக்குமதிக்கு அனுமதி அளித்தது போல், ஆஸ்திரேலியன் கஸ்பா பீஸ் இறக்குமதிக்கும் அனுமதி அளிக்க வேண்டும்.
கடன் பெறுவோருக்கு விதிக்கப்படும் பரிசீலனை கட்டணங்களை முழுதுமாக நீக்க வேண்டும். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு சார்ஜ், பி.ஓ.எஸ்., சார்ஜ் ஆகியவற்றுக்கு, ஆர்.டி.ஜி.எஸ்.,ல் இருப்பது போல், எந்த கமிஷனும் இல்லை என்று அறிவிக்க வேண்டும்.
பல சரக்கு மற்றும் சிறு கடைகளில் இன்று வரை ரொக்கப் பரிவர்த்தனை வாயிலாகவே வணிகம் நடக்கிறது.
எனவே, தற்போது வங்கிகளில் செலுத்தும் பணத்திற்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது முற்றிலுமாக நீக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.