ADDED : ஜூலை 31, 2024 01:32 AM

சென்னை: சி.ஐ.ஐ., எனப்படும், இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், 'புட்புரோ 2024' உணவு பதப்படுத்துதல், தொழில்நுட்பங்கள் குறித்த சர்வதேச மாநாடு மற்றும் கருத்தரங்கம், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், ஆக., 9, 10, 11ல் நடைபெற உள்ளது.
இதில் மத்திய, மாநில அமைச்சர்கள், தொழில் நிறுவனங்கள், தொழில்முனைவோர்கள் என, பல தரப்பினரும் பங்கேற்கின்றனர்.
இதுகுறித்து, சி.ஐ.ஐ., தமிழக தலைவர் ஸ்ரீவத்ஸ் ராம் கூறியதாவது:
உணவு பதப்படுத்தும் தொழிலில் உள்ள அனைத்து தரப்பினரும், தங்களின் தயாரிப்பு, தொழில்நுட்பம், துறையின் வளர்ச்சிக்கான சவால், வாய்ப்பு குறித்து விவாதிக்க சிறந்த தளமாக, இந்த மாநாடும், கருத்தரங்கமும் இருக்கும்.
மூன்று நாட்கள் நடைபெறும் மாநாட்டில் குளிர்ப்பதன கிடங்குகளில் சேமிப்பு, குளிரூட்டல், போக்குவரத்து தொடர்பாக விவாதிக்கப்படும். பல்வேறு வகை உணவு பொருட்களை காட்சிப்படுத்தும் உணவு திருவிழாவும் நடைபெற உள்ளது.
கண்காட்சியில், 250 உள்நாடு மற்றும் சர்வதேச நிறுவனங்கள், 25,000 பார்வையாளர்கள், வர்த்தகர்கள் பங்கேற்க உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.