தமிழகத்தில் முதல் முறையாக பொது - தனியார் முறையில் தயார்நிலை தொழிற்கூடம்
தமிழகத்தில் முதல் முறையாக பொது - தனியார் முறையில் தயார்நிலை தொழிற்கூடம்
ADDED : ஆக 15, 2024 10:11 PM

சென்னை: காஞ்சிபுரம், வல்லம் வடகால் தொழில் பூங்காவில், 'சிப்காட்' நிறுவனம், முதல் முறையாக, 'பொது - தனியார்' முறையில், 'பிளக் அண்டு பிளே' எனப்படும் தயார் நிலை தொழிற்கூடம் அமைக்க உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் வல்லம் வடகாலில், தமிழக அரசின் சிப்காட் எனப்படும் தொழில் முன்னேற்ற நிறுவனத்துக்கு, 1,456 ஏக்கரில் தொழில் பூங்கா உள்ளது. அதன் அருகில், 234 ஏக்கரில் வானுார்தி தொழில் பூங்கா உள்ளது.
இதுவரை, சிப்காட் நிறுவனம், ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக, தன் செலவில் நிலத்தை மேம்படுத்தி, தொழில் பூங்காக்களை உருவாக்கி வருகிறது.
தற்போது, முதல் முறையாக பி.பி.பி., எனப்படும் பொது - தனியார் முறையில், வல்லம் வடகாலில், 1.10 லட்சம் சதுர அடியில், தயார் நிலை தொழிற்கூடம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது.
பொது - தனியார் முறையின் கீழ், தொழிற்கூடத்திற்கான நிலத்தை சிப்காட் வழங்கும். அங்கு, டெண்டரில் தேர்வாகும் தனியார் நிறுவனம் தன் செலவில் தொழிற்கூடம் அமைத்து, 45 ஆண்டுகளுக்கு பராமரிக்க வேண்டும். இந்த கூடங்கள், நிறுவனங்கள் தொழில் துவங்க ஒதுக்கப்படும். இதன் வாயிலாக கிடைக்கும் வருவாயை சிப்காட், தனியார் நிறுவனம் பகிர்ந்து கொள்ளும்.

