உரிமம் புதுப்பிக்காவிடில் அபராதம் மர ஆலைகளுக்கு வனத்துறை உத்தரவு
உரிமம் புதுப்பிக்காவிடில் அபராதம் மர ஆலைகளுக்கு வனத்துறை உத்தரவு
ADDED : மார் 05, 2025 11:37 PM

சென்னை:மரம் சார்ந்த தொழிற்சாலைகள், உரிய காலத்தில் உரிமங்களை புதுப்பிக்க தவறினால், கடுமையான அபராதம் செலுத்த நேரிடும் என, வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா காலத்தில், மர ஆலைகள் தங்களது உரிமங்களை புதுப்பிக்கும் நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து, உரிமத்தை புதுப்பிப்பதற்கான வழிகாட்டுதல்களை வனத்துறை வெளியிட்டு உள்ளது.
இதன்படி, ஒருமுறை வாய்ப்பாக, 2024 டிச., 31க்குள் மாவட்ட வருவாய் அலுவலர்களிடம் தாக்கல் செய்யப்பட்ட உரிமம் புதுப்பித்தல் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்கப்படும். இதற்கு, 10,000 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்.
இதே போன்று, உரிம காலம் முடிந்த நிறுவனங்கள் 2024 டிச., 31க்கு பின் விண்ணப்பத்தை தாக்கல் செய்தால், அவை ஆறு மாதம் வரை மட்டுமே பரிசீலனைக்கு ஏற்கப்படும்.
முதல் மூன்று மாதத்துக்குள் பெறப்படும் விண்ணப்பங்களுக்கு தினசரி, 500 ரூபாய் வீதமும்; அடுத்த மூன்று மாதங்களில் எனில், தினசரி, 1,000 ரூபாய் வீதம் அபராதம் வசூலிக்கப்படும்.
ஆறு மாதங்களுக்கு பின் தாக்கலாகும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என, புதிய வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான அரசாணையை, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமை செயலர் சுப்ரியா சாஹூ பிறப்பித்துள்ளார்.