ADDED : மே 31, 2024 12:44 AM

புதுடில்லி:உத்தர பிரதேசம், தெலுங்கானா, பீகார் மற்றும் சிக்கிம் மாநிலங்கள், கடந்த நிதியாண்டுக்கான பட்ஜெட் இலக்கை தாண்டி, மூலதன செலவினம் செய்துள்ளதாக, சி.ஏ.ஜி.,யின் தற்காலிக கணக்கு அறிக்கை தெரிவித்துள்ளது.
இவை தவிர, மற்ற 25 மாநிலங்களும் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்ட மூலதன செலவினத்தில் 84 சதவீதத்தை அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக இந்த மாநிலங்கள், மூலதன செலவினத்துக்காக தங்களது பட்ஜெட்டில், 8.37 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியிருந்தன. இதில் 7.02 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்துள்ளன.
செயல்படுத்துவதற்கு போதுமான திட்டங்கள் இல்லாததால், பட்ஜெட் இலக்கை அடைய முடியாமல் போயிருக்கலாம் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். சில மாநிலங்கள், நிதி பற்றாக்குறையை சமாளிக்க, மூலதன செலவினத்தை மேற்கொள்ளாமல் இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த 25 மாநிலங்களின் மொத்த வரி வருவாய், கடந்த நிதியாண்டில், 29.56 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இதில், மாநிலங்களின் சொந்த வரி வருவாயின் பங்கு 60.80 சதவீதமாகும். அதிகபட்சமாக தெலுங்கானா மாநிலத்தின் சொந்த வரி வருவாயின் பங்கு, 82 சதவீதமாக இருந்தது.