உலகளாவிய 'ஸ்டார்ட் அப்' மையம் தமிழக அதிகாரிகள் அமெரிக்கா பயணம்
உலகளாவிய 'ஸ்டார்ட் அப்' மையம் தமிழக அதிகாரிகள் அமெரிக்கா பயணம்
ADDED : ஜூலை 05, 2024 10:36 PM

சென்னை:தமிழக, 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு சந்தை வாய்ப்பு ஏற்படுத்தி தர, அரசு சார்பில் உலகளாவிய, 'ஸ்டார்ட் அப்' மையம் அமெரிக்காவில் துவங்கப்பட உள்ளது. இதற்காக, ஸ்டார்ட் அப் டி.என்., உயரதிகாரிகள், அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
தமிழக அரசின் ஸ்டார்ட் அப் நிறுவனம், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி, முதலீடு கிடைக்க முதலீட்டாளர் சந்திப்பு, சந்தை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்குகிறது.
சிங்கப்பூர், அமெரிக்கா
தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில், 8,500க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன.
மின் வாகன உற்பத்தி, இணையதளத்தில் வேளாண் பொருட்கள் விற்பனை உட்பட பல்வேறு வளர்ந்து வரும் தொழில் துறைகளில் புதிய நிறுவனங்களை, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துவக்கி வருகின்றன.
இந்நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு, உலகஅளவில் சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி தரவும், வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடு கிடைக்கவும், தமிழர்கள் அதிகம் வசிக்கும் வெளிநாடுகளில் உலகளாவிய ஒருங்கிணைப்பு மையம் அமைக்க, ஸ்டார்ட் அப் டி.என்., முடிவு செய்துள்ளது.
அதன்படி, முதலாவது ஒருங்கிணைப்பு மையம் துபாய் நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
இதை, தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், இம்மாத இறுதிக்குள் திறந்து வைக்க உள்ளார். இதைதொடர்ந்து, உலகளாவிய ஒருங்கிணைப்பு மையம், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவில் துவக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை அமைச்சர் அன்பரசன், சட்டசபையில் சமீபத்தில் வெளியிட்டார்.
ஆலோசனை
இதையடுத்து, அந்த மையத்தை அமைக்க இடம் அடையாளம் காணுவது உள்ளிட்ட பணிகளுக்காக தற்போது, ஸ்டார்ட் அப் டி.என்., தலைமை செயல் அதிகாரி சிவராஜா ராமநாதன் உட்பட அதிகாரிகள் குழு, அமெரிக்காவிற்கு சென்றுள்ளது.
இக்குழு, அந்நாட்டில் வசிக்கும் தமிழர்கள், முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் உள்ளிட்டோரை சந்தித்து, ஆலோசிக்க உள்ளது.