பிப்ரவரியில் தங்கம் இறக்குமதி 20 ஆண்டுகளில் காணாத வீழ்ச்சி விலை உயர்வால் விற்பனையும் குறைந்தது
பிப்ரவரியில் தங்கம் இறக்குமதி 20 ஆண்டுகளில் காணாத வீழ்ச்சி விலை உயர்வால் விற்பனையும் குறைந்தது
ADDED : பிப் 25, 2025 10:37 PM

மும்பை:தொடர் விலை உயர்வு காரணமாக, நாட்டின் தங்கம் இறக்குமதி, பிப்ரவரியில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது, அரசின் புள்ளிவிபரங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது.
முந்தைய ஆண்டு, இதே காலத்தோடு ஒப்பிடுகையில், தங்கத்தின் இறக்குமதி, 85 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.
தங்கத்தை வாங்குவதில், சீனாவுக்கு அடுத்து, உலகின் இரண்டாவது மிகப்பெரிய நாடாக இந்தியா உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் உள்ளிட்ட பல்வேறு அசாதாரண சூழல்களால், சர்வதேச சந்தையில், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து, தங்கத்தின் விலை தொடர்ந்து புதிய உச்சங்களை கண்டு வருகிறது.
இந்நிலையில், பிப்ரவரியில் வழக்கத்தை விட தங்கம் இறக்குமதி குறைந்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:
வங்கிகள், வியாபாரிகள் மிகக் குறைந்த அளவு தங்கத்தையே இறக்குமதி செய்து உள்ளனர். பிப்ரவரியில் இறக்குமதி கிட்டத்தட்ட 15 மெட்ரிக் டன்களாக சரிந்து உள்ளன. கடந்த 20 ஆண்டுகளில் இதுவே குறைந்தபட்ச இறக்குமதி அளவாகும். 2024, பிப்ரவரியில், 103 மெட்ரிக் டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு இருந்தது.
கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் பிப்ரவரி மாத சராசரி தங்கம் இறக்குமதி 76.5 டன்களாக பதிவாகி இருந்தது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

